வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது நிச்சயம் அற்புதமான ஒன்று தான். மழை காரணமாக சுமார் இரண்டரை தினங்கள் டெஸ்ட் போட்டி நடைபெறாமல் இருக்க, இரண்டு நாட்களில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்று நெருக்கடியும் உருவாகி இருந்தது.
ஆனால் இந்த ரிஸ்கையே எளிதான விஷயமாக எடுத்து செயல்பட்டிருந்த இந்திய அணி ஐந்தாவது நாளின் பாதியிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வாந்திருந்தது. வங்கதேச அணியை முதல் இன்னிங்சில் 233 ரண்களில் ஆல் அவுட் செய்த இந்திய அணி, அதே வேகத்தில் பேட்டிங் இறங்கி 35 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து மீண்டும் வங்கதேச அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி எளிதான இலக்கை அசால்டாக டீல் செய்து வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி. நான்காவது நாளில் இந்திய அணி வங்கதேசத்திற்கு இரண்டு இன்னிங்ஸ்களில் மிக குறுகிய இடைவெளியில் பந்து வீச வேண்டுமென முடிவு செய்திருந்தது. இந்த முடிவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்காக கம்பீர் மற்றும் ரோஹித் இணைந்து இதனை தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
நான்காவது நாளிலேயே இரண்டாவது இன்னிங்சை தொடங்க வேண்டும் என ரோஹித் ஷர்மா மற்றும் கம்பீர் முடிவெடுத்தது பற்றி பேசும் அஸ்வின், “4 வது நாளிலேயே அடுத்த இன்னிங்சை தொடங்க வேண்டுமா என்று தான் நாங்கள் யோசித்தோம். ஏனென்றால் இங்கே வெப்பம் அதிகமாக இருந்தது. நானே ஒரு நாளில் 4 டி ஷார்ட்களை மாற்றி விட்டேன். அதுவும் இங்குள்ள வெப்ப நிலைக்கு சரியாகவில்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழலில், மீண்டும் நாங்கள் பந்து வீச வேண்டும் என்பது நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் தான். வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களில் கட்டுப்படுத்தினால் கூட ஐந்து செஷன்கள் தொடர்ந்து ஆடுவது போல இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கும் நிச்சயம் அது கடினமான விஷயம் தான்.
முதலில் பேட்டிங் செய்து விட்டு பின்னர் பவுலிங் செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என நினைத்தோம். ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீசும் முடிவு எனக்கும், பும்ராவுக்கும் ஆரம்பத்தில் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு இன்னிங்சில் பந்து வீசி விட்டு நன்றாக குளித்து புத்துணர்ச்சியுடன் தான் அடுத்த இன்னிங்சில் பந்து வீச வேண்டும்.
ஆனால் கேப்டன் ரோஹித் முதல் பந்தில் இருந்தே சிக்சருக்கு பறக்க விட்டு ஆடத் தொடங்கினார். கேப்டனாக அவரே அப்படி செய்யும் போது அதை பின்பற்றுவதை தவிர வேறு வழியும் நமக்கு இல்லை. இது தான் ரோஹித்தின் திறனை நிர்ணயிக்கும் ஒரு புள்ளி. ஒன்றை சொல்லி விட்டு வேறொன்று செய்வது கிடையாது. என்ன சொல்கிறாரோ அதையே செய்வது தான் கடினமான ஒன்று” என அஸ்வின் கூறி உள்ளார்.