கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளத்தில் எங்கு பார்த்தாலும் தோனியை பற்றிய கருத்துக்கள் தான் மிக அதிகமாக இருந்து வருகிறது. சர்வதேச அரங்கில் சிறந்த கேப்டனாக ஜொலித்த தோனி, ஐபிஎல் தொடரிலும் மிக முக்கியமான கேப்டனாக உருவெடுத்திருந்தார். பலரின் ஃபேவரைட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கவும் முக்கிய காரணமாக இருந்து வரும் தோனி, ரசிகர்களுக்காகவும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
பலரும் 40 வயதுக்கு மேல் ஆகும் போது ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் சூழலில், இன்னும் அவர் ஆடி வருவதால் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது அவர் ஆட வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு மேல் அவர் ஆடினால் அணியில் ஒரு வீரரின் முக்கியமான இடம் பறிபோகும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் தோனியின் இடத்தில் வேறு இளம் வீரரை தயார் செய்தால் அவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவதுடன் சர்வதேச அரங்கிலும் அவர் நல்ல ஒரு வீரராக மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் இன்னும் ஒரு சில சீசன்கள் தோனி ரசிகர்களுக்காக மட்டுமே ஆடுவது அந்த இளம் வீரர்களுக்கான வாய்ப்பை பறிப்பது போல் இருக்கும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி எட்டாவது அல்லது ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் வந்ததும் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. அந்த இடத்தில் அவர் ஆடுவதற்கு நல்ல ஒரு பந்து வீச்சாளரையே ஆட வைத்து விடலாம் என்றும் பலர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அந்த கடைசி கட்டத்தில் அவர் பேட்டிங் செய்வதற்கு அவரது முழங்கால் வலியும் காரணமாக அமைந்திருந்தது.
விக்கெட் கீப்பராக இருப்பதால் முழங்கால் வலி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ஒருவரது முட்டி தேயாமல் இருக்க அதில் ஒரு விதமான நீர் சுரந்து கொண்டே இருக்கும். அந்த திரவம் சுரப்பது நின்று விட்டால் இரண்டு எலும்புகளும் தேய்வதை நிச்சயம் நம்மால் தடுக்க முடியாது.
தோனி கடந்த 20 வருடங்களாக விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். இதனால் அதிக முறை அவர் முட்டி மடக்கி உட்கார்ந்து எழ வேண்டும் என்ற நிலை இருந்தது. அதன் பெயரில், அவருக்கு முட்டிவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான ஆட்கள் 35 வயது தாண்டியதுமே விக்கெட் கீப்பர் பணியை விட்டு சாதாரண வீரர்களாக தான் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ஆடுவார்கள்.
43 வயதிலும் கீப்பிங் செய்யும் தோனியின் முட்டியில் அந்த திரவத்தை செயற்கையாகவும் நுழைத்துள்ளனர். இதனால் முன்பு போல தோனியால் பேட்டிங் செய்யாவோ, நடக்கவோ முடியாது. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக தோனியால் முடிந்தால் நிச்சயம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஆடலாம். ரசிகர்களுக்காக அவர் இப்படி செய்வது வியப்பைத் தான் ஏற்படுத்துகிறது” என அஸ்வின் கூறியுள்ளார்.