2023 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில் இந்தியாவின் நம்பர் 4 இடத்துகான பிரச்சனை இன்னும் தொடரும் நிலையில் அதற்கான தீர்வை ஆசிய கோப்பை போட்டிகளின் மூலம் சரி செய்ய இந்திய அணி நிர்வாகம் முற்பட்டிருக்கிறது. 2019 உலகக் கோப்பையில் தொடங்கிய இந்த நம்பர் 4 பிரச்சனை இன்னமும் தொடர்ந்து வருகிறது, உலகக் கோப்பைக்கு முன்னர் நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கும் என அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது .
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நம்பர் 4 இடத்தில் அம்பாட்டி ராயடுவை ஆட வைக்க முதலில் பரிசீலித்தது. ஆனால் அவர் அணியில் எனோ சேர்க்கப்படவில்லை, இதன் காரணமாக விஜய் சங்கர் நம்பர் 4இல் களமிறங்கினார். பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபில்டிங் என 3டி பிளேயராக கருதப்பட்டு அணியில் சேர்த்த விஜய் சங்கரினால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை.
இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட போதும் விஜய் சங்கர் நான்காம் இடத்தில் சரிவர பொருந்தாதது மற்றும் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிக்கர் தவனின் காயம் போன்றவை இந்திய அணியின் 2019 உலகக்கோப்பை கனவை தகர்த்தெறிந்தது. எனவே வரவிருக்கும் இந்த உலகக் கோப்பையிலாவது சிறந்த வீரரை நான்காம் இடத்தில் ஆட வைப்பது தான் இந்த தலைவலிக்கு நிவாரணமாக அமையும் என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.
உலகக் கோப்பைக்கு முன்னர் வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. காயம் காரணமாக மிக நீண்ட காலமாக போட்டிகளில் விளையாடாமல் ஓய்விலிருந்த இருந்த கே எல் ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரின் வருகையால் இந்திய மிடில் ஆடர் மீண்டும் பலம் வாய்ந்த மிடிலாடராக தென்படுகிறது.
ஆசியக் கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கே.எல். ராகுலை வெகுவாக பாராட்டியுள்ளார். இது கூறித்து அவர் கூறுகையில்: “யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நமது இந்திய அணிக்கு இன்று வரை சிறப்பான ஒரு மிடிலாடர் அமையாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். மிடில் ஆர்டரில் கே எல் ராகுல் தனது அனுபவத்தின் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நம்பர் 5 இடத்தில் அவர் பர்ஃபெக்ட் பொருத்தமாக இருப்பார்” என அஸ்வின் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா ( கேப்டன்), விராட் கோலி, சப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா , பிரசித் கிருஷ்ணா.
பேக்கப் வீரர் : சஞ்சு சாம்சன்