இனி அடுத்த கொஞ்ச மாத காலத்திற்கு ஐபிஎல் தொடர்பான செய்திகள் நிறைய இணையத்தை ஆக்கிரமிக்கும் என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்திய அணிக்கு அடுத்தடுத்த மாத காலங்களில் கிரிக்கெட் தொடர்கள் வந்தாலும் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டுக்கு முன்பாக நடைபெற உள்ளதால் அதில் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறலாம் என்றும் அல்லது அணியில் இடம்பெறாமல் போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
முதலில் தோனி சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார் என்றும் ஐபிஎல் விதிகள் அவருக்கு சாதகமாக இருக்காது என்றும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது போல கே. எல். ராகுல், ரிஷப் பந்த் என இந்திய அணியின் பெரிய தலைகள் பெயரும் அடிபட, மெகா ஏலத்தில் நிறைய ட்விஸ்ட்கள் அரங்கேறும் என்றும் கருதப்பட்டு வந்தது.
இதற்கிடையே, லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுல், அணியின் உரிமையாளருடன் மோதல் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவற்றில் உண்மை இல்லை என்றும் அவர் லக்னோ அணியில் தொடர்ந்து ஆடுவார் என்பதும் உறுதியாகி விட்டது.
இனி வரும் நாட்களில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர்பாக நிறைய வதந்திகள் வெளி வரலாம் என்றும் ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரும் உறுதியான தகவல் கிடைக்காது என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான், கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்ல காரணமாக இருந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அவர்கள் வெளியேற்ற திட்டம் போட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதிலும் உண்மைத் தன்மை என்ன என்பது சரிவர தெரியாத சூழலில், ஜடேஜாவை நிச்சயம் சிஎஸ்கே அணி தக்க வைக்காது என சில காரணங்களுடன் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத ஜடேஜா, டி20 உலக கோப்பைத் தொடரிலும் சொதப்பி இருந்தார்.
டெஸ்டில் மட்டுமே கலக்கி வரும் ஜடேஜாவால் குறைந்த ஓவர் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. இதே போல ஜடேஜாவை 16 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துள்ளதால் அவரை விடுவிக்கும் பட்சத்தில் அவர்களின் தொகையும் அதிகமாகலாம். அது மட்டுமில்லாமல், இத்தனை நாட்களாக சீனியர் வீரர்களை பெரிதும் நம்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிறைய இளம் ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பல காரணங்கள், ஜடேஜாவுக்கு பாதகமாக இருப்பதால் இதனை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி அவரை விடுவிக்குமா அல்லது தொடர்ந்து தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.