நேற்றைய இறுதிப் போட்டியில் கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி தான் யார்? தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதை கிரிக்கெட் உலகுக்குக் காட்டியுள்ளார் ரவிந்தர ஜடேஜா. நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்றுத் தருண இன்னிங்ஸாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்த இன்னிங்ஸின் மூலம் சமீபமாக தோனி இறங்குவதற்காக தன்னை அவுட் ஆக வேண்டும் எனக் கத்திய சிஎஸ்கே ரசிகர்களுக்கும் சேர்த்து ஜடேஜா பதிலளித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு பொறுப்பேற்று பல சொதப்பல்களை செய்த ஜடேஜா மீண்டும் இந்த சீசனில் தன்னை ஒரு சிறந்த வீரராக நிரூபித்துள்ளார் .
பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் இந்த தொடர் முழுவதும் பவுலிங்கிலும் கலக்கி பல விக்கெட்களை எடுத்து அணிக்காக திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக திகழ்ந்துள்ளார். போட்டி முடிந்ததும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசிய ஜடேஜா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது பேச்சில் “எனது சொந்த மாநிலத்தின் மைதானத்தின் முன் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது அற்புதமான உணர்வு. CSK க்கு ஆதரவாக பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்துள்ளனர். இந்த கூட்டத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இரவு மழை நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர். CSK ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சொல்ல வேண்டும்.
இந்த கோப்பையை எங்கள் அணியின் ஸ்பெஷலான நபரான தோனிக்கு டெடிகேட் செய்கிறேன். கடைசி ஓவரில் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கடுமையாக அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த ஓவரின் ஒவ்வொரு பந்தும் மிகவும் முக்கியம். பந்து எந்த திசையில் எப்படி வீசப்பட்டாலும் அடித்தே ஆகவேண்டும் என்று நான் யோசித்தேன்.
இதையும் படிக்கலாமே: நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும். விதி அவர்கள் கோப்பையை வாங்கணும்னு இருக்கு. கடவுள் அனுகிரகம் எனக்கும் இருக்கு – ஹர்திக் பாண்டியா பேச்சு
கடைசி 2 பந்துகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மோஹித்திடம் இருந்து ஸ்லோ பால், வைடு யார்கர் போன்ற பந்துகளை நான் எதிர்பார்த்தேன். அதே சமயம் பந்தை நேராக அடிக்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். CSK-வின் ஒவ்வொரு ரசிகருக்கும் நான் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி இப்போது எங்களை உற்சாகப்படுத்துகிறீர்களோ, அப்படியே தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்துங்கள்.” இந்த உற்சாகம் எதிர்காலத்திலும் கோப்பையை வெல்ல உதவும் என பேசியுள்ளார்.