சென்னை அணியின் முக்கியமான ஆல்ரவுண்டரான ரவிந்தர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு தோனி இருக்கும்போதே அவரைக் கேப்டனாக நியமித்தது சிஎஸ்கே நிர்வாகம். அதுவரை எல்லாம் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், அவர் தலைமையில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்த நிலையில் அவராகவே கேப்டன் பதவியை விட்டு விலகினார்.
பின்னர் கேப்டன் பதவியை தோனி ஏற்ற போதும் அந்த சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது. அந்த சீசனின் இறுதியில் சில போட்டிகளில் ஜடேஜா அணியில் எடுக்கப்படவில்லை. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை எழுந்ததாக அப்போது தகவல்கள் பரவின.
அதன் பின்னர் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஜடேஜாவை சமூகவலைதளப் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தியது. ஜடேஜாவும் தன்னுடைய சமூகவலைதளக் கணக்கில் சிஎஸ்கே சம்மந்தமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இதனால் இந்த சீசனில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இருதரப்பும் சமாதானமாகி சிஎஸ்கே அணியில் அவர் இணைந்தார். சமாதானத்துக்கு தோனி முக்கியமான காரணமாக இருந்தார் என சொல்லப்பட்டது.
இந்த சீசனின் சில போட்டிகளில் தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என கத்திக் கூச்சல் போட்டது ஜடேஜாவைக் கடுமையாக பாதித்திருக்கும் என சொல்லப்படுகிறது. கடைசியாக சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி முடிந்ததும் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சூடான விவாதத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்கள் எழக் காரணமாக அமைந்தது.
இதனால் அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் மறுபடியும் பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை வலுவாக்கும் விதமாக ஜடேஜா சமீபத்தில் பகிர்ந்த் ட்வீட் ஒன்று அமைந்தது. அதில் “கர்மா எப்படியும் உங்களிடம் வரும். அது சிக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, ஆனால் வந்தே தீரும்” என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ள ரவிந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா “உங்களுடைய சொந்த வழியை பின்பற்றுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஜடேஜாவின் டீவீட்டிற்கு அவருடைய மனைவி செய்துள்ள இந்த ரிப்ளையானது, சமூக வலைதள பக்கங்களில் ஜடேஜா, சிஸ்கே குறித்து கிளம்பிய சர்ச்சைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.