அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறுவது ஏறக்குறைய உறுதியாக உள்ள நிலையில் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இறுதியான முடிவுகள் இதுவரையில் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு கணக்கை தெரிவிக்க பிசிசிஐ விரைவில் இது குறித்து சிறப்பாக ஆலோசித்து தகுந்த முடிவை அறிவிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மெகா ஏலம் நடைபெற இருப்பதால் நிச்சயம் மூன்று முதல் நான்கு வீரர்களை மட்டும் தான் ஒரு அணியால் தக்க வைக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது அத்துடன் RTM கார்டு மூலம் வேறு வீரர்களை வேண்டுமானால் ஏலத்துக்கு நடுவே அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் தகவல்களாக வலம் வருவதால் நிச்சயம் இது தொடர்பான இறுதி முடிவை பிசிசிஐ அறிவித்தால் தான் உண்மை நிலவரம் என்ன என்பதும் தெரிய வரும்.
அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை வெளியேற்றுவார்கள், யாரை தக்க வைப்பார்கள் என்பது பற்றி நிறைய தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. முன்னதாக சிஎஸ்கே அணியில் தோனி விடுவிக்கப்படுவார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நிறைய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அறிவிப்பார்கள் என்றால் அவர் நிச்சயம் தொடர்ந்து ஆடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
இதேபோல மும்பை அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா வேறு அணிக்கும், சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் மாற போவதாகவும் வதந்திகள் வைரலாக, பின்னர் அவற்றில் உண்மை இல்லை என்பதும் தெரிய வந்தது. ஐபிஎல் விறுவிறுப்பு தற்போதே ஆரம்பித்து விட்டதால் உண்மையான தகவல்களை ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் தெரிவிப்பது வரைக்கும் ரசிகர்கள் நிச்சயம் காத்திருந்தே தான் ஆக வேண்டும்.
அப்படி ஒரு சூழலில் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சில முக்கியமான வீரர்களை விடுவிப்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு பேருமே சீனியர் வீரர்கள் என்பதால் வருங்காலத்தை அடிப்படையில் கொண்டு அவர்களை விடுவிக்க உள்ளதாகவும், அதே வேளையில் கேமரூன் கிரீன் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகிய இளம் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஆர்சிபி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.