ஐபிஎல் தொடரில் தற்போது ரசிகர்கள் அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மே 18ஆம் தேதி மோத உள்ள போட்டி மீது தான். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் காண ஆறு அணிகள் போட்டி போட்டு வரும் நிலையில் இதில் இரண்டு அணிகளாக சென்னை மற்றும் பெங்களூர் இருந்து வருகின்றன.
இந்த இரு அணிகளுமே மோத உள்ள போட்டி தான் அவர்களின் கடைசி லீக் போட்டி என்பதால் இதில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் தகுதி கொஞ்சம் பிரகாசமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே வேளையில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும் மற்ற சில போட்டிகளின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக முடிய வேண்டும் என்பதும் முக்கியம்.
இன்னொரு பக்கம் சென்னை அணி, ஆர்சிபி அணியை வீழ்த்தினாலே ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம் என்ற நிலை தான் உள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு சீசனில் முதல் போட்டியில் மோதி இருந்த நிலையில் சென்னை அணி அபார வெற்றி பெற்று அசத்தியிருந்தனர்.
இந்த தோல்விக்காக பழி தீர்க்க ஆர்சிபி முனைப்பு காட்டுமா அல்லது மீண்டும் ஒரு முறை அவர்களை வீழ்த்தி பிளே ஆப் முன்னேற சிஎஸ்கே துடிப்புடன் செயல்படுமா என்பதை அறிந்து கொள்ளவே ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர். இதனால் சனிக்கிழமை எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலும் வந்து சேர்ந்துள்ளது.
சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதும் போட்டி, மே 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்பாக மே 18 ஆம் தேதி ஆர்சிபி அணி ஆடிய நான்கு போட்டிகளிலும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை மே 18 ஆம் தேதி தோல்வியே சந்திக்காத ஆர்சிபி அணியில் ஆடி வரும் விராட் கோலி, இதே நாளில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக 27 ரன்களும் 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 113 ரன்களும், 2023 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக 100 ரன்களும் இதே நாளில் அடித்துள்ளார் கோலி. இப்படி ஆர்சிபி மற்றும் கோலி என அனைவருக்கும் மே 18 ஒரு சிறப்பான நாளாக இருக்கும் சூழலில், அதையே அவர்கள் தொடர்வார்களா அல்லது சிஎஸ்கே இதனை உடைத்து வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.