ஆர்சிபி அணிக்கு என்னதான் ஆச்சு என்பது போன்று தான் அந்த அணியின் ரசிகர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடருக்காக பல பந்து வீச்சாளர்களை எடுக்கும் வாய்ப்பு இருந்த போதிலும் ஏலத்தில் அதற்கான முயற்சியை செய்யாமல் அல்சாரி ஜோசப், பெர்குசன் என ஒரு சில வீரர்களை மட்டும் தான் ஆர்சிபி அணி எடுத்திருந்தது.
அந்த அணியை பொருத்தவரையில் கடந்த சில சீசன்களாகவே பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்துவீச்சு தான் மோசமாக இருந்து வந்தது. இதனால் சிறந்த பந்துவீச்சாளர்களை ஏலத்தில் அவர்கள் எடுக்காமல் மீண்டும் ஒரு முறை சொதப்பி உள்ளனர். தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் அவர்களை கொண்டு ஆடி வரும் ஆர்சிபி, லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகள் ஆடி இருந்தது.
இதில் ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி கண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் தோற்ற முதல் அணியாகவும் பெங்களூர் மாறி இருந்த நிலையில் தற்போது லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட அதே நிலை தான் மீண்டும் நடந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் டி காக் மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். தொடக்கத்தில் இவர் அதிரடியாக ஆடினாலும் நடுவே திடீரென நிதானமாக ஆடி பின்னர் கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடியாக ரன் சேர்த்தார். 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து டி காக் அவுட்டாக, கடைசி இரண்டு ஓவர்களில் பேட்டிங் செய்த நிக்கோலஸ் பூரன், மொத்தமாக ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். அதிலும் அவர் அடித்த ஒரு சிக்ஸர் 106 மீட்டர் தூரம் சென்றிருந்தது.
பூரனின் அதிரடியால் நினைத்ததை விட லக்னோ அணி, அதிக ரன்கள் எடுத்தது. அவர்கள் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுக்க, போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்ததால் ஆர்சிபி அணி இந்த முறை வென்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பேட்டிங்கில் கோலி 22 ரன்களில் அவுட்டாக அவருடன் களமிறங்கிய தொடக்க வீரர் பாப் டு பிளஸ்ஸிஸ் 19 ரன்னில் ரன் அவுட்டானார். மறுபுறம் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகவும், கிரீன் 9 ரன்களிலும் அவுட் ஆகியதால் பெங்களூர் அணி பின்னடைவை சந்தித்தது.
15 ஓவர்கள் முடிவில் அவர்கள் 6 விக்கெட்கள் இழப்புக்கு 104 ரன்கள் எடுக்க, தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் களத்தில் நிற்க, அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 78 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்படி இருக்கையில், அடுத்த இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் சேர்க்கப்பட, தினேஷ் கார்த்திக் அவுட்டானார். 17 வது ஓவரின் முதல் பந்தில் லோம்ரரும் ரன் அவுட்டாக, ஆர்சிபியின் தோல்வியும் உறுதியானது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆர்சிபி, 153 ரன்கள் மட்டுமே எடுத்ததால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களின் 2 வது வெற்றியையும் இந்த தொடரில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சீசனில், தங்களின் சொந்த மைதானத்தில் இரண்டு முறை தோற்ற முதல் அணியாக மாறி உள்ளது ஆர்சிபி. நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ளதால் இனி வரும் 10 போட்டிகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.