ப்ளே ஆஃப்க்கு செல்ல குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே தகுதி பெற்றுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என பல அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது. இதில் எந்தந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் என்பதை இப்போது வரை உறுதியாகக் கூறமுடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சூழ்நிலை இதுவரை எந்த முறையும் நடந்ததில்லை.
இந்நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் அபாரமாக விளையாடி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்துள்ளது RCB. இந்த சேஸில் கோலியின் 6 ஆவது ஐபிஎல் சதமும் டு பிளஸ்சியின் அபாரமான அரைசதமும் முக்கியப் பங்காற்றின.
கோலி ஐபிஎல் போட்டிகளில் அடிக்கும் 6 ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோலி, ஐபிஎல் போட்டிகளில் இப்போது தான் சதமடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் கோலி மேலும் சில சாதனைகளையும் செய்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 7500 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த ரன்களை அவர் ஒரே ஒரு அணிக்காக மட்டுமே விளையாடி சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த கோலி, இது போல 6 சீசன்களில் 500 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதே போல டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார் கோலி. ரோஹித் ஷர்மா மொத்தமாக 6 சதங்கள் அடித்திருக்க, கோலி 7 சதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: நானும் கோலியும் களத்தில் பேசிக்கொண்டது இது தான் – பேட்டியில் வெளிப்படையாக சொன்ன டு பிளசிஸ்
இந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி இப்போது புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அவர்களின் ரன்ரேட்ட்டும் +0.18 என்ற பாசிட்டிவ் விகிதத்தில் உள்ளது. எப்படி இருந்தாலும் அவர்கள் தங்கள் அடுத்த போட்டியில் குஜராத் அணியை வென்றுதான் ஆகவேண்டும். அப்படி வெல்லும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக ப்ளே ஆஃப்க்குள் சென்றுவிடுவார்கள். ரன்ரேட் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.