இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கிளாசன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விராத் கோலி 100 ரன்களையும், டூப்ளிசிஸ் 71 ரன்கள் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணி பெற்ற வெற்றியின் மூலம் தற்போது பிளே ஆப் சுற்றிற்கான போட்டி மற்ற அணிகளுக்கு இடையே இன்னும் காத்திருப்பை அதிகமாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருந்தால் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேரடியாக பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் பெங்களூரு அணி பெற்ற வெற்றியினால் லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற தாமதம் ஆகியுள்ளது.
தற்போது வரை புள்ளி பட்டியல் குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தேர்வு ஆகியுள்ள வேளையில் அடுத்த மூன்று இடங்களுக்கான போட்டி பலமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் கடைசி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு கூட அந்த அணிகளின் முடிவுகள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: விளம்பர விதியை மீறிய தோனி. அதுவும் முதல் இடத்தில். கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத விளம்பரங்களாம்.
அதேவேளையில் லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் இருவரும் தகுதி அடைவார்கள். மீதமுள்ள இடத்திற்கு பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.