இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரும் சமனில் உள்ளது. எஞ்சியுள்ள 3 போட்டிகளும் இரு அணிகளுக்கும் தொடரை வெல்ல முக்கியமானதாக பார்க்கப்படுவதால் அவர்கள் அதற்கேற்ப அணியை தயார் செய்யும் நோக்கத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அடுத்துள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இந்தியா சமீபத்தில் அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்தது போல தான் அமைந்துள்ளதாக இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.
முதல் இரண்டு டெஸ்ட்களில் தனிப்பட்ட காரணங்களால் விலகி இருந்த விராட் கோலி, மீதமுள்ள 3 போட்டிகளிலும் அதே விஷயத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை. இதே போல முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் புஜாராவுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இது தவிர அதிக விமர்சனத்தை சந்தித்த கேஎஸ் பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட, துருவ் ஜூரேல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 2 வது டெஸ்டில் காயம் காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோர் மீண்டும் தற்போது இடம்பிடித்துள்ளனர். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் உடற்தகுதியின் அடிப்படையில் மூன்று போட்டிகளிலும் ஆட தேர்வாவார்கள் என்றும் பிசிசிஐ சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, கடைசி டெஸ்டில் சதம் அடித்திருந்த கில், ஃபார்முக்கு வந்து தனது இடத்தையும் உறுதி செய்து விட்டார். இந்த நிலையில், பிரபல இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது இடம்பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில இன்னிங்ஸ்களாகவே, டெஸ்டில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த இந்திய வீரர்கள் தான் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர். ஆனால் கில் சதமடித்து மீண்டும் தனது வாய்ப்பை பெற்றுக் கொள்ள, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் சொதப்பிய ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது இடம்பெறாமல் போயுள்ளார்.
முன்னதாக இவர் காயம் காரணமாக தான் அணியில் தேர்வாகவில்லை என குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது ஆட்டத்தின் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்னும் சில வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதிலும் ஷ்ரேயாஸ் ஐயரை மட்டும் ஒதுக்கி உள்ளது பல விதமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.