இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் சேத்தன் சர்மா விலகினார். அதற்கான காரணமே வேடிக்கையானது. தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங்க் ஆப்பரேஷனில் அவர் பிசிசிஐ பற்றியும் கோலி, கங்குலி மோதல் பற்றியும் உளறி தள்ளி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதனால் அவராகவே பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிவ்சுந்தர் தாஸ் தலைமையிலான இடைக்கால குழு தேர்வுக்குழுவாக செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்த குழு கலைக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு நியமனம் செய்யப்படவேண்டும். இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் பொறுப்புக்கு நார்த் ஸோனிலிருந்து சேவாக் தேர்ந்தெடுக்க பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் சேவாக் இந்த பொறுப்புக்காக விண்ணப்பிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசியதாக பிடிஐ சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி சேவாக், தேர்வுக்குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணமே அந்த பதவிக்கு வழங்கப்படும் குறைவான சம்பளம் தான். கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழு தலைவருக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை மிகவும் குறைவான தொகையாக சேவாக் நினைப்பதாக சொல்லப்படுகிறது.
சேவாக் போன்ற மூத்த வீரர்கள் வர்ணனை செய்வது, சில விளம்பரங்களில் தோன்றுவதன் மூலமாகவே இதைவிட அதிக தொகையை ஈட்டிவிட முடியும். பிசிசிஐயின் வருவாய்க்கு இதுபோன்ற முக்கியமான பதவிகளுக்கு இன்னும் கூடுதல் தொகையை சம்பளமாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக்கின் இந்த முடிவால் அடுத்த தேர்வுக்குழு தலைவராக யார் வருவார் என்ற கேள்வி இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்போது அந்த பதவி அனில் கும்ப்ளே வசம் ஒப்படைக்கப்பட்டது. அதுபற்றி பின்னர் பேசிய சேவாக், கோலி கேட்டுக் கொண்டதால்தான் அந்த பதவிக்கே நான் விண்ணப்பித்தேன் எனக் கூறியிருந்தார்.
ஒரு அணிக்கு தேர்வுக்குழு தலைவர் என்பது மிக முக்கியமான ஒரு பொறுப்பு. திறமை மற்றும் தைரியம் நிறைந்த ஒருவர் அந்த பதவியில் இருந்தால் தான் அணியானது வலுவாக இருக்கும். உதாரணத்திற்கு வெங்சர்க்கர் தேர்வுக்குழு தலைவராக இருந்த பொழுது, அணியில் கோலியை சேர்க்க வேண்டுமா இல்லை பத்ரிநாத்தை சேர்க்க வேண்டுமா என்ற ஒரு கேள்வி எழுந்தபோது அவர் துணிவோடு கோலி தான் இடம் பெற வேண்டும் என்று முடிவெடுத்தார். இப்படிப்பட்ட சிறப்பான முடிவுகளை எடுக்க கூடியவர்கள் ஒருவர் தான் தேர்வுக்குழு தலைவராக வர வேண்டும். அதற்காக பிசிசிஐ அவர்களுக்கான சம்பளத்தை சற்று உயர்த்துவதில் தவரில்லை என்று பிடிஐ வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.