நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுத்தபோது அவர்கள் விமர்சிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு எடுக்கும் வீரர்களே பட்டையை கிளப்பி வரும் நிலையில் இத்தனை கோடிக்கு ஒரு வெளிநாட்டு வீரரை ஐபிஎல் தொடரில் முதலீடு செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் கண்டனங்களும் அதிகமாகவே இருந்தது.
அதனை மெய்யாக்கும் வகையில் லீக் போட்டிகளில் ரன் மட்டுமே கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மிட்செல் ஸ்டார்க். பெரும்பாலும் 40 முதல் 50 ரன்கள் அவரது ஓவரில் அனைத்து பேட்ஸ்மேன்களும் எளிதாக அடிக்க, விக்கெட் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ஸ்டார்க் மீது அனைவருமே விமர்சனம் மட்டும் தான் முன்வைத்து வந்தனர்.
அவருக்கு பதிலாக மற்ற இந்திய வீரர்களும் இறங்கினால் கூட நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் தங்களின் கருத்துக்களை இஷ்டத்திற்கு தெரிவித்து வர, லீக் சுற்று முழுவதும் ஸ்டார்க்கின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பிளே ஆப் என வந்தவுடன் வேறு அவதாரம் எடுத்த ஸ்டார்க், ஹைதராபாத்திற்கு எதிராக நடந்த குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.
ஹெட், அபிஷேக் ஷர்மா என லீக் போட்டிகளில் அதிரடி காட்டிய விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே எடுத்து அசத்தி இருந்த ஸ்டார்க், மொத்தமாக இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஸ்டார்க்கின் மாயாஜாலத்தால் இரண்டு போட்டிகளிலும் மீள முடியாத ஹைதராபாத், பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது.
இதன் காரணமாக ஸ்டார்க் மீதான விமர்சன கருத்துக்களும் தூள் தூளாக உடைந்து போனது. இந்த நிலையில் ஆரம்ப லீக் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக செயல்படாதது பற்றி ஆஸ்திரேலியாவில் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “மிட்செல் ஸ்டார்க் போன்ற ஒருவர், அதிக விலையுடன் ஐபிஎல் தொடரில் வரும் போது பொதுவாக அவர் செயல்படுவதை விட இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை இருக்கும். அதுவும் ஸ்டார்க் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்து வீசிய போது ஸ்விங் ஆகவே இல்லை.
அதுவும் ஸ்டார் வீசும் வேகத்தில் பந்து பேட்டில் பட்டாலே, இன்சைடு எட்ஜ் வாங்கி மிக எளிதாக ஃபோருக்கும் சென்று விடும். இந்திய மைதானங்கள் எப்போதுமே பந்தை வேகமாக வீசுவதற்கு எளிதான இடமாக இருக்காது. ஆனால் டி20 உலக கோப்பை ஆடப்போகும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில், காற்று குறைவாக இருப்பதால், ஸ்டார்க் பந்தில் தாக்கம் அதிகமாக இருக்கும்” என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.