இந்திய அணிக்கு இந்த ஆண்டு மிக மிக முக்கியமான ஒரு டெஸ்ட் தொடர் காத்துக் கொண்டிருக்கிறது. டி20 உலக கோப்பை கைப்பற்றியுள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்திருந்தது ஒரு பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது. ஆனால் இதனால் கொஞ்சம் கூட துவண்டு போகாமல் இனிவரும் தொடர்களிலும் கவனம் செலுத்தி அவர்கள் பட்டையை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது. இந்த மூன்று தொடர்களை தொடர்ந்து தான் மற்றொரு மிக முக்கியமான ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட உள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர், ஆஷஸ் தொடரை போல விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த தொடரில் மோதி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வெளிநாட்டு மண்ணில் பெரிதாக டெஸ்ட் தொடரில் முத்திரை பதிக்காது என்ற ஒரு விமர்சனம் தான் கடுமையாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடரில் முற்றுப்புள்ளி வைத்திருந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையை பெற்ற இந்திய அணி மீண்டும் 2020 – 21 ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்திருந்தது.
இப்படி இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பியுள்ளதால் தற்போது மூன்றாவது முறையும் அவர்களை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பார்கள் என்றும் நம்பிக்கையில் உள்ளனர். அப்படி ஒரு சூழலில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“இது மிகுந்த போட்டி உள்ள ஒரு தொடராக தான் இருக்கப் போகிறது. ஆனால் இந்த முறை இந்திய அணியை விட ஆஸ்திரேலியா தான் சற்று முன்னே நிற்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த இரண்டு தொடரில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.
கடந்த இரண்டு முறையும் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இந்த முறை ஐந்து போட்டிகள் நடப்பது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே போல டிராவில் முடியும் போட்டிகள் நிறைய இருக்குமா என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் நிற்காமல் அவர்கள் தான் இந்த முறை தொடரை வெல்வார்கள் என்று நம்புகிறேன்.
சில போட்டிகள் டிரா அல்லது மழை காரணமாக தடைபடலாம். ஆனால் ஆஸ்திரேலிய அணி 3 – 0 என்ற கணக்கில் இந்த தொடரை வெல்லும்” என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.