கேகேஆர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி பிரபலமடைந்தவர் ரிங்கு சிங். தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம் அனைவரையும் கட்டி இழுத்த ரிங்கு சிங் தற்போது மிகப்பெரிய விஷயம் ஒன்றை செய்கிறார்.
நீங்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பலரும் பேசி நாம் கேட்டிருப்போம். அதற்கு வாழும் உதாரணமாக ரிங்கு சிங் இருக்கிறார்.
ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் துப்புரவு பணியாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அவரை வறுமையில் இருந்து காப்பாற்றியது கிரிக்கெட் மட்டும்தான்.
இந்த நிலையில் தன்னை போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக உதவியை செய்து வருகிறார் ரிங்கு. ஐபிஎல் தொடரில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தான் ஊதியமாக கிடைத்தது. அதை வைத்து தமது சொந்த செலவுக்காக பயன்படுத்தாமல் தன்னுடைய மக்களுக்காக வழங்கி இருக்கிறார்.
அதன்படி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 15 கிரிக்கெட் வீரர்களுக்கு ஹாஸ்டல் ஒன்றை சிறிய அளவில் ரிங்கு சிங் கட்டுகிறார். அதில் பயிற்சியாளர் உடன் தங்கி இருந்து கிரிக்கெட் தொடர்பாக கற்றுக்கொள்ள ரிங்கு சிங் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதன் மூலம் அந்த ஹாஸ்டலில் இருந்து பலரும் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ரிங்கு சிங் இன்னும் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
வெறும் ஐபிஎல் போட்டியில் கிடைத்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவ முன் வந்திருக்கிறார். இதனால் ரிங்கு சிங் மீது ரசிகர்களின் மரியாதை உயர்ந்து இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் சாதித்தாலும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அயர்லாந்து தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரிங்கு சிங் போல் பலவீரர்களும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.