ஐபிஎல் தொடரில் தற்போது அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்களை பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் சில அணிகள் எடுத்த முடிவுகள் ஏற்கனவே இணையதளத்தில் அதிகம் வைரலாகி வந்த நிலையில் மற்ற சில அணிகளின் முடிவுகள் ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், குழப்பத்தையும் பரபரப்பையும் தான் ஏற்படுத்தி வருகிறது.
கே எல் ராகுல் கேப்டனாக இருந்த லக்னோ அணி அவரை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதேபோல டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரிஷப் பந்த்தை அணியில் இருந்து மாற்றியதுடன் அபிஷேக் போரல் என்ற இளம் வீரரையும் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டிருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் லீக் தொடர்களில் பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரூஸர்.
இந்திய மைதானங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிநாட்டு வீரராக வெளிப்படுத்திய அவர் இந்த முறை டெல்லி அணியில் தொடர்வார் என்று கருதப்பட்டது. ஆனால் ஜேக் ப்ரூஸரையும் டெல்லி அணி விடுவித்துள்ள நிலையில் ஆர்டிஎம் மூலம் ஏலத்தில் எடுப்பதற்கான திட்டங்களை போட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அந்த வகையில் லக்னோ, டெல்லி அணிகளை போல கொல்கத்தா அணி எடுத்த சில முடிவுகளும் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.
நடப்பு சாம்பியனாக இருக்கும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் இருந்த போதிலும் அவரை வெளியேற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ராமன்தீப் சிங் ஆகிய ஆறு பேரை தக்க வைத்துள்ளது. இப்படி ஒரு அணியை அவர்கள் அமைப்பார்கள் என நிச்சயம் யாருமே கருதியிருக்க மாட்டார்கள். ஷ்ரேயஸ் ஐயரை வெளியேற்றியது தொடர்பாக பல பரபரப்பான கருத்துக்கள் பேசப்பட்டு வரும் நிலையில் தான் ரிங்கு சிங் 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
சுனில் நரைன், ரசல் ஆகியோரை விட அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ள ரிங்கு சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 55 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருந்தார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 474 ரன்கள் சேர்த்த ரிங்கு சிங், அதே ஆண்டில் 5 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து வெற்றியை தேடிக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இதே ஃபார்மின் காரணமாக, இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
அவரை கொல்கத்தா அணி 55 லட்ச ரூபாய்க்கு தக்க வைத்திருந்த நிலையில் தற்போது 13 கோடி ரூபாய்க்கு அவர்கள் மீண்டும் ஒருமுறை சொந்தமாக்கி உள்ளது. தோனிக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என்ற பெயரெடுத்து வரும் நிலையில், கடந்த சம்பளத்தை விட தற்போது அவர் ஐபிஎல் தொடரில் பெற்றுள்ள தொகை சுமார் 2200 மடங்கு அதிகம் என்பதும் அனைவரையும் மிரண்டு போக வைத்துள்ளது.