வீடியோ: சூப்பர் ஓவர்.. 17 ரன் தேவை…6, 6, 6.. மீண்டும் தொடர் சிக்ஸர்களை விளாசி மீண்டும் சம்பவம் செய்த ரிங்கு சிங்

- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 5 பந்துகளில் 5 சிக்சர் விளாசி கொல்கத்தா அணியை ரிங்கு சிங் வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் ரிங்கு சிங் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டார். சூழலுக்கு ஏற்ப விளையாடும் பேட்ஸ்மேன்களும் ரிங்கு சிங்கும் ஒருவராக இருக்கிறார்.

இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கினார். இந்திய அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமானதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதனால் ரிங்கு சிங் வரும் நாட்களில் சிறந்த வீரராக வருவார் என்று சொல்லப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் யுபி டி20 லீக் தொடரில் ரிங்கு சிங் விளையாடி வருகிறார். அதில் மீரட் மேவ்ரிக்ஸ் – காசி ருத்ராஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது. 181 ரன்கள் எடுத்தும் வெற்றி கிடைக்காததால் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றனர். அப்போது சூப்பர் ஓவரில் களமிறங்கிய எதிரணி 16 ரன்கள் சேர்த்தது.

இதன் காரணமாக ரிங்கு சிங் அணி வெற்றிபெறுவதற்கு 17 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இலக்கை எட்ட ரிங்கு சிங் களமிறங்கினார். முதல் பந்தில் ரன் எடுக்காமல் இருந்த நிலையில், அடுத்ததாக சிவா சிங் வீசிய 3 பந்துகளிலும் 3 சிக்சர்களை விளாசி ஆட்டத்தை முடித்துக் காட்டினார் ரிங்கு. ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதன் மூலம் ரிங்கு சிங் ஏன் சிறந்த வீரர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். சேஸிங் என்று வந்துவிட்டால் எவ்வளவு பெரிய இலக்கையும் தேவைக்கேற்ப அதிரடி காட்டி அணியை வெற்றிபெற வைக்கும் திறமையை கொண்டுள்ளார் ரிங்கு சிங். இந்த வீடியோவை கேகேஆர் அணி நிர்வாகமும் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளது.

ரிங்கு சிங்கின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்திய அணியின் பெஸ்ட் ஃபினிஷராக ரிங்கு சிங் இருப்பார் என்றும், அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்