ஐபிஎல் தொடர் மூலம் இன்று இளம் வீரர்கள் நிறைய பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருவதுடன் மட்டுமில்லாமல் சர்வதேச அரங்கில் பல பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த முக்கியமான ஒரு பேட்ஸ்மேன் தான் ரிங்கு சிங்.
இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாக ஆடி வருவதுடன் மட்டுமல்லாமல் பல முக்கியமான போட்டிகளில் அவர்கள் தோல்வி அடையும் கட்டத்தில் இருந்தபோது கூட வெற்றி பெற வைத்துள்ளார். குறைந்த பந்துகளில் நிறைய ரன்கள் அடித்து கொல்கத்தா அணியின் ரன்னை ஏற்றுவதையும் மிக முக்கியமான ஒரு பணியாக வைத்துள்ளார்.
இந்திய அணிக்காகவும் கடந்த ஆண்டு முதல் டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறார் ரிங்கு சிங். இன்று இந்திய அணியில் பினிஷர் ரோல் இடத்திற்கு தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் அதனை மிகச் சிறப்பாக செய்து வரும் ரிங்கு சிங் வருங்காலத்தில் இன்னும் தனது பேட்டிங்கால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு ஒருவேளை கொல்கத்தா அணியில் ஆட முடியவில்லை என்றால் எந்த அணியில் ஆட விருப்பம் என்று கேள்வி ரிங்கு சிங்கிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் தெரிவித்த பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதற்கான விதிகள் குறித்து மீட்டிங் ஒன்று நடைபெற்ற நிலையில் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
அப்படி குறைந்த வீரர்களை ஒரு அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிலை வந்தால் சிறப்பாக இருந்த வீரர்களையும் வெளியேற்றும் இக்கட்டான நிலை உருவாகும். அப்படி ஒருவேளை கொல்கத்தா அணியில் ஆடிவரும் ரிங்கு சிங் அந்த அணியில் ஆட முடியாமல் போனால் எந்த அணியில் ஆட விருப்பம் என்ற கேள்வி ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் தெரிவித்த ரிங்கு சிங், “ஆர்சிபி அணியில் தான் சேர வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் அங்கே தான் விராட் கோலி இருக்கிறார்” என கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ரிங்கு சிங் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே நல்ல ஒரு நட்பு இருந்து வரும் சூழலில் ஐபிஎல் தொடரில் கூட கோலியின் பேட்டை ரிங்கு சிங் பரிசாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.