நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரிஷப் பந்த் இணைந்திருந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தாலும் பல வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருவது அந்த அணியின் மைனஸ் ஆகவும் இருந்து வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகளில் ஆடி இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முதல் 2 போட்டிகளில் முறையே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்களின் சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் சந்தித்திருந்த டெல்லி அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களின் வெற்றி கணக்கையும் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடங்கியிருந்தனர். இந்த வெற்றி பயணத்தை அவர்கள் தொடர் முழுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் கொல்கத்தா அணிக்கு எதிரான தங்களின் நான்காவது போட்டியில் அப்படியே அனைத்தும் தலைகீழாக மாறிப் போனது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நூலிழையில் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையை தவற விட்டதுடன் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் எடுத்திருந்தது. ரிங்கு சிங், ரகுவன்ஷி, ரசல் என அனைவருமே அதிரடி காட்ட இதற்கு தொடக்க வீரராக பிள்ளையார் சுழி போட்டு வைத்திருந்தார் 85 ரன்கள் எடுத்திருந்த சுனில் நரைன். அவர் ஏழு ஃபோர்கள், ஏழு சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.
இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில் ரிஷப் பந்த் 55 ரன்களும், ஸ்டப்ஸ் 54 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற எந்த வீரரும் 20 ரன்களை கூட தொடாததால் 166 ரன்களில் 18 வது ஓவரிலேயே ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தனர்.
இந்த தோல்வியின் காரணமாக, புள்ளிப் பட்டியலில் 9 வது இடத்திலும் அவர்கள் இருக்கும் நிலையில், போட்டிக்கு பின்னர் பேசியிருந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், “எங்கள் பந்து வீச்சிலேயே அனைத்தும் முடிந்து விட்டது. இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்கலாம் என நினைத்த நாள் இது. இப்படிப்பட்ட கடினமான இலக்கை துரத்தி போவதை விட முயற்சித்து ஆல் அவுட் ஆவதே சிறந்தது. சில டிஆர்எஸ்களை நாங்கள் எடுக்காமல் விட்டோம்.
மைதானத்தில் ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருந்ததால் கலந்துரையாடி சில ரீவியூகளை எடுக்க முடியாமல் போனது. டிஆர்எஸ்-க்கான நேரத்தையும் ஸ்க்ரீனில் எங்களால் சரிவர பார்க்க முடியவில்லை. ஸ்க்ரீனில் சில பிரச்சனைகள் இருந்ததால் நேரமும் சரியாக தெரியவில்லை. மேலும் சில விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். சிலவற்றை கட்டுப்படுத்த முடியாமலும் போகும். அதனால் ஸ்பின்னருக்கான இடம் இல்லை என்பதால் தான் அக்சர் படேலுக்கு ஒரு ஓவரை மட்டும் கொடுத்து அதே வழியில் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
ஒரு அணியாக, தனித்தனி வீரர்களாக அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டிய நேரம் இது. எனது பிட்னஸ் மற்றும் கம்பேக்கை நான் ரசித்தபடி தினந்தோறும் ஆடி வருகிறேன். கிரிக்கெட்டில் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் கடினமாக உழைத்து உங்களது சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும்” என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.