ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ரியான் பராக், பல முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தாலும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே வந்தார். பல முக்கியமான போட்டிகளில் ரன் சேர்க்கவே ரியான் பராக் தடுமாறியதால் ராஜஸ்தான் அணி தோல்வி அடையும் நிலையும் உருவாகி இருந்தது.
அப்படி ஒரு வீரராக இருந்த போதிலும் தொடர்ந்து ராஜஸ்தான் அவரை அணியை விட்டு விலக்காமல் வாய்ப்பு கொடுத்தும் வந்தது. இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் ஓவராக கருத்துக்களை பதிவிட்டு தான் பெரிய பேட்ஸ்மேன் போல காட்டும் ரியான் பராக், ஒரு போட்டியில் கூட அதனை நிஜமாக்கும் வகையில் முந்தைய சீசன்களில் சிறப்பாக ஆடாததால் ரசிகர்களை அவரை விமர்சித்து வந்ததுடன் அணியிலிருந்து மாற்ற வேண்டும் என்றும் கூட தங்களின் கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர்.
அப்படி ஒரு சூழலில் தான் ராஜஸ்தான் அணி தொடர்ந்து அவரது பேட்டிங்கை நினைத்து கவலைப்படாமல் தக்க வைத்ததற்கான பலன் தற்போதைய ஐபிஎல் தொடரில் கிடைத்துள்ளது .இதுவரை ராஜஸ்தான் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடக்க வீரர்கள் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.
முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி இருந்த நிலையில் அதன் பின்னர் தொடர்ந்து ரியான் பராக் மட்டும் தான் ஆடி வருகிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் கூட முதலில் சில விக்கெட்டுகளை இழந்ததால் ராஜஸ்தான் அணி தோற்றுவிடும் என ரசிகர்கள் அஞ்சி கொண்டிருந்த சமயத்தில் சூப்பராக உள்ளே வந்த ரியான், நிதானமாக ஆடி கடைசி கட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் சிக்சர், போர்களுடன் அதிரடி காட்டி அரைச்சதம் அடித்து வெற்றி இலக்கை எட்டி இருந்தார்.
தற்போது 3 போட்டியில் சேர்த்து 181 ரன்களுடன் கோலியின் ஆரஞ்சு கேப்பையும் வென்றுள்ளார். இதனால் நிச்சயம் சிறப்பான ஐபிஎல் தொடராக அவருக்கு அமைந்து டி 20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவதற்கான முயற்சியில் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசியிருந்த ரியான் பராக், “இங்கே எதுவுமே மாறவில்லை. நான் அனைத்து விஷயங்களையும் எளிதாக மாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த ஆண்டு என்னுடைய இலக்கையும் சாதாரணமாக வைத்திருந்தேன். அதாவது பந்தை பார்க்க வேண்டும், அதனை கரெக்டாக அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான். நான் இது போன்ற சூழ்நிலையில் தான் முதல் தர கிரிக்கெட்டில் அதிகம் ஆடி உள்ளேன்.
கடந்த நான்கு ஐந்து ஐபிஎல் தொடர்களாக நான் சிறப்பாக ஆடவே இல்லை. இதனால் நான் என்னுடைய பயிற்சியை கடினமாக்கியதுடன் இதுபோன்ற இக்கட்டான நிலையில் களமிறங்கும் போது எப்படி ஆட வேண்டும் என்றும் பயிற்சி எடுத்தேன் அப்பா எப்போதும் என்னுடைய போட்டியை வீட்டில் இருந்து டிவியில் பார்த்து நிறைய விஷயங்களை ஆராய்ந்தும் பார்க்கிறார். என்னுடைய அம்மா இங்கே இருந்து போட்டிகளை கண்டு களித்தார்” என தெரிவித்துள்ளார்.