பொதுவாக ஒருவர் உலக அளவில் அல்லது சர்வதேச அளவில் மிகப் பெரிதாக சாதிக்கும்போது அவர்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருப்பார்களோ அதைவிட ஒரு படி மேலே எமோஷனல் ஆகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வது நிச்சயம் அவர்களுடைய பெற்றோர்கள் தான். தனது மகனோ, மகளோ ஊரே பேசும்படி சாதித்து விட்டால் அதை நினைக்கும் போது அவர்களுக்கு கண்ணீர் விடும் அளவுக்கு முக்கியமான ஒரு தருணமாகவும் அந்த விஷயம் இருக்கும்.
அப்படித்தான் தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அதிலிருந்து ஒவ்வொரு வீரர்களின் பெற்றோர்களும் நிச்சயம் கண்ணீர் மல்க ஆனந்தத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒரு உலக கோப்பையை வென்றதை ஒட்டுமொத்த நாடே கொண்டாடி வரும் சூழலில் ரோஹித் ஷர்மாவின் தாயாரும் மிக எமோஷனலாக இந்த தருணத்தை உணர்ந்திருந்தார்.
ரோஹித் ஷர்மா சமீபகாலமாக சிறந்த கேப்டனாக விளங்கிய போதிலும் அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது சற்று விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. இதனால் டி20 உலக கோப்பையை எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திலும் தான் அவர் இருந்து வந்தார். ஆனால் பல தடைகளையும் தாண்டி இறுதிப்போட்டியில் வந்த நிறைய பிரச்சனைகளையும் சமாளித்து தனது அணியை மிக நேர்த்தியாக வழிநடத்தி இந்திய அணிக்கு கோப்பையைத் தட்டிக் கொடுத்திருந்தார் ரோஹித் ஷர்மா.
அது மட்டுமில்லாமல் சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்று இந்தியா திரும்பியிருந்த போது அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பும் அளிக்கப்பட்டிருந்தது. தனது மகனான ரோஹித் ஷர்மாவை கட்டியணைத்து அவருக்கு முத்தம் கொடுத்து ஆனந்தத்தை பொழிந்திருந்தார் அவரது தாயார்.
இதனிடையே உலக கோப்பைக்கு முன்பாக ரோஹித் ஷர்மா சொன்ன விஷயம் ஒன்று பற்றி அவரது தாயார் சில கருத்துக்களைக் கூற, ரசிகர்களும் சற்று எமோஷனலாகி உள்ளனர். “எனது மகன் கையில் உலக கோப்பை தற்போது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பாக எங்களை வந்து சந்தித்திருந்த ரோஹித் ஷர்மா. அவர் இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி இருந்தார்.
இதனால் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை செய்யுங்கள் என்று தான் நான் கூறியிருந்தேன். தற்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதுடன் மருத்துவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்டும் இருந்தது. ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு எனது மகனை பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன்” என உணர்ச்சி பெருக்குடன் பேசி இருந்தார் ரோஹித்தின் தாயார்.