கடந்த 20 நாட்களுக்குள்ளாக இந்திய அணியை சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்து விட்டது என்றே சொல்லலாம். டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்டு களம் இறங்கி இருந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் நான்கு போட்டிகள் வென்று கைப்பற்றி இருந்த இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரும் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்னொரு பக்கம் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து அடுத்தடுத்து ஓய்வினை அறிவிக்க, இளம் வீரர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதே போல புதிய பயிற்சயாளராகவும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும் கம்பீர் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாகவே அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மூன்று அணியை தயார் செய்ய திட்டம் போட்டுள்ளதாகவும், காயம் ஏதும் இல்லாமல் இருக்கும் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனால் கம்பீரின் பயிற்சி காலத்தில் நிச்சயம் புது விதமான இந்திய அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக ஆடும் தொடரை எதிர்பார்த்தும் காத்திருந்து வருகின்றனர்.
அதே போல டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் தீர்ப்பை உள்ளிட்டவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடுவார் என்றே தெரிகிறது.
தற்போது 36 வயதாகும் ரோஹித் சர்மா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரது ஓய்வு குறித்து தெரிவித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. “நான் ஏற்கனவே இதை கூறியுள்ளேன். நீண்ட தூரமாக நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இதனால் நிச்சயம் நான் இன்னும் நிறைய நாட்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்க போகிறீர்கள்” என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி தொடருடன் ரோஹித் சர்மா அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்த்தால் அப்படியே நேர்மாறாக அவர் இன்னும் தொடர்ந்து ஆடுவார் என கூறியுள்ளது, 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை வரைக்கும் ஆடுவாரா என்ற ஆவலையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.