இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. முதல் டெஸ்டில் அவர்களை வீழ்த்தி இருந்த இந்திய அணி, மீதமிருக்கும் நான்கு போட்டிகளில் மூன்றிலாவது வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம்.
அதற்கு நிகராக ஆஸ்திரேலிய மண்ணில் மூன்றாவது முறையாக தொடர்ந்து டெஸ்ட் தொடரில் வென்ற பெயரையும் எடுத்து சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாக உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் அவர்களது ஆட்டம் சற்று சறுக்கலை கண்டுள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது அடிலைய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் அதிக விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சை போலவே இந்த முறையும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி இருந்த இந்திய அணி, 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது.
தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் அபாயகரமான பந்து வீச்சை மிக கவனமாக எதிர்கொண்டு ரன் சேர்த்து வருகிறது. 86 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது நாளில் இன்னும் கவனமாக ஆடி ரன் சேர்த்தால் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
அதே நேரத்தில் பிங்க் பந்தை கொண்டு இரண்டாவது நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்துவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், இந்த போட்டியில் ரோஹித் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் இணைந்து பேட்டிங் செய்துள்ளதன் மூலம் ஒரு முக்கியமான சம்பவம் டெஸ்ட் அரங்கில் அரங்கேறி இருந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ஆடிவந்த ரோஹித், ராகுலுக்காக மீண்டும் மிடில் ஆர்டரில் இந்த போட்டியில் பேட்டிங் செய்திருந்தார். இதன் மூலம், அவரும் ரிஷப் பந்த்தும் இணைந்து ஆடும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தான் ரோஹித் மற்றும் பந்த் ஆகிய இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்திருந்தனர்.
தொடர்ந்து, 3 ஆண்டுகளாக ரோஹித்தின் ஃபார்ம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாக அது நடைபெறாமல் இருந்தது. இதனிடையே, மீண்டும் ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆட வந்ததால் அவர் பந்த்துடன் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளதும் குறிப்பிடத்த்தக்கது.