நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என பல சிறப்பான வீரர்கள் இருந்த போதிலும் அவர்களால் லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் போனது.
இதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தது தான். அவர் உள்ளே வந்தாலே மைதானத்தில் அவருக்கு எதிரான குரல்கள் அதிகம் இருந்தது. ரோஹித் தான் கேப்டனாக தொடர வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தும் மும்பை நிர்வாகம் எடுத்த முடிவால் ஹர்திக் புதிய கேப்டனாக இருந்த நிலையில் இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்காமல் தான் போயிருந்தது.
இதனால் லீக் போட்டிகளிலும் கூட மும்பை ரசிகர்களே அவர்கள் ப்ளே அப் சுற்றுக்கு வர வேண்டாம் என்று நினைத்துடன் மைதானத்தில் வந்து தங்களின் எதிர்ப்பையும் அதிகம் தெரிவித்திருந்தனர். இதன் பெயரில் தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சியுடன் வெளியேறி இருந்தது.
இதனிடையே ரோஹித் ஷர்மாவும் கேப்டன் இல்லை என்பதால் அடுத்த சீசனில் நிச்சயம் மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்ற தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. குறைந்த வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிலை வந்தால் நிச்சயம் சூர்யகுமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தான் மும்பை அணி தேர்வு செய்யும் என தெரிகிறது.
இதனால், ரோஹித் ஷர்மாவை வெளியேற்றுவார்கள் என்றும் கடந்த சில தினங்களாகவே பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இது பற்றி தனது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் ஷர்மா தனது கடைசி போட்டியை ஏற்கனவே ஆடிவிட்டார் என்று நினைக்கிறேன். அவரும் அந்த அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட விரும்பவில்லை.
இனிமேல் ரோஹித் ஷர்மாவை மும்பை ஜெர்சியில் பார்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன். இது என்னுடைய புரிதல் மட்டும்தான். ஒருவேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா அடுத்த சீசனில் மும்பையில் ஆடாமல் இருப்பதற்கு தான் வாய்ப்பு அதிகம்.
ரோஹித் சர்மாவை போல மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் இஷான் கிஷனையும் விடுவிக்கும் என்று கருதுகிறேன். ஏனென்றால் 15. 5 கோடி ரூபாய் அவருக்காக இருப்பதால் இது அதிகம் என நினைத்து நிச்சயம் இஷான் கிஷனை தக்க வைக்க மும்பை நிர்வாகம் முடிவு செய்யாது” என கூறியுள்ளார்.