இந்தியாவின் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளை சந்தித்து 89 ரன்களும், கேப்டன் க்ருனால் பாண்டியா 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது.
இருந்தாலும் இந்த போட்டியின் போது விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடி விதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த 16-வது ஐபிஎல் தொடர் முழுவதுமாகவே சற்று சுமாரான பார்மில் விளையாடி வந்த ரோஹித் இந்த போட்டியில் விளையாடிய விதம் மீண்டும் பழைய ரோகித் சர்மாவை பார்ப்பது போலவே இருந்தது.
அதிலும் குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா 9.4 ஓவர்களில் 90 ரன்கள் இருந்தபோது முதல் விக்கட்டாக 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் 25 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை குவித்து அசத்தினார்.
இந்த துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த போதிலும் இறுதியாக மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.