ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், இலங்கை ரசிகர்களுக்கு இடியையும் இறக்கியுள்ளது. கொழும்பு மைதானத்தில் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தமாக அந்த நம்பிக்கையை இந்திய அணியின் சிராஜின் முடித்து கட்டினார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு முகமது சிராஜ் தனது சீற்றத்தை மொத்தமாக வெளிப்படுத்தினார். 4வது ஓவரில் 4 விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ், அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலமாக சிராஜின் வேகத்தில் இலங்கை அணி மொத்தமாக 50 ரன்களுக்கு சரிந்தது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் சுப்மன் கில் – இஷான் கிஷன் இருவரும் 51 ரன்கள் இலக்கை வெறும் 6.1 ஓவர்களில் சேஸ் செய்து சாதனை வெற்றியை பெற்றனர். இதன் மூலமாக இந்திய அணி ஆசியக் கோப்பையை 8வது முறையாக கைப்பற்றி சாதித்துள்ளது. இதற்கு முன் 2018ஆம் ஆண்டில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றிருந்தது.
அதேபோல் ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் இறுதிப்போட்டியிலும் வென்று அசத்தியுள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்றதன் மூலமாக ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய அணிக்காக அதிக ஆசியக் கோப்பை போட்டிகளை வென்ற கேப்டன் என்ற சாதனை தோனியின் வசம் 9 வெற்றிகளுடன் இருந்தது. இதனை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
அதே போல ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆசிய கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் அசாருதின் மற்றும் தோனி ஆகிய இருவரும் இரண்டு ஆசிய கோப்பைகளை வென்று இருந்தனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவும் அதில் இனைந்து தோனி மற்றும் அசாருதினின் சாதனையை சமன் செய்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனை பட்டியலில் 2 புதிய சாதனைகள் சேர்க்கப்பட்டுள்ளது.