இரண்டாவது டெஸ்ட் போட்டி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தொடர்பாக ஒரு மிகப்பெரிய குழப்பம் இருந்து வந்தது. முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் இல்லாததால் தொடக்க வீரராக ராகுல் ஆடியிருந்தார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் ரோகித் திரும்பி உள்ளதால் ராகுல் மீண்டும் மிடில் ஆர்டரில் ஆடுவாரா அல்லது தொடக்க வீரராகவே தொடர்வாரா என்ற கேள்வி உருவானது.
ரோகித்தை விட ஜெய்ஸ்வாலுடன் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை ராகுல் அமைத்திருந்ததால் அவரே தொடர வேண்டும் என்று தான் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி பேசி இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் தான் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு இடத்தில் ஆடுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டதன் பின்னர், அவர் மிடில் ஆர்டர் ஆடிய போட்டிகள் மிகக் குறைவாகவே உள்ளது. தொடர்ந்து தொடக்க வீரராகவே களமிறங்கி பழகிய போதிலும் கே.எல். ராகுல் இடத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என ரோகித் சர்மா எடுத்த முடிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிடில் ஆர்டரில் ரோகித் சர்மா ஆட உள்ளதால் இது தொடர்பான புள்ளி விவரங்களை பற்றியும் ரசிகர்கள் தற்போது பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஆடி உள்ள ரோஹித் சர்மா, மொத்தம் 1587 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 3 சதங்களை அவர் அடித்துள்ள நிலையில் இந்த மூன்றுமே அவர் ஆறாவது இடத்தில் ஆடிய போது வந்தது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
மேலும் 6 வது இடத்தில் ஆடிய போது தான் ரோஹித்தின் டெஸ்ட் சராசரி 50 க்கு மேல் இருந்துள்ளது (54.57). 3 வது இடத்தில் கில்லும், 4 வது மற்றும் 5 வது இடத்தில் முறையே கோலி மற்றும் பந்த் ஆகியோர் ஆடுவார்கள் என்பதால் ரோஹித் 6 வது இடத்தில் ஆடவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதே போல, கடைசியாக ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆடிய போட்டி தொடர்பான தகவலும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
கடந்த 2018 – 19 ஆம் ஆண்டில் இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மிடில் ஆர்டரில் ஆடியிருந்தார் ரோஹித் ஷர்மா. மெல்போர்னில் நடந்த இந்த டெஸ்டில் 114 பந்துகளில் 63 ரன்களை ரோஹித் சேர்க்க, இந்திய அணியும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.