இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே பரபரப்பாக நடந்து வந்த டெஸ்ட் தொடரின் முடிவு தற்போது கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்திய மண்ணில் போட்டிகள் நடந்து வந்தாலும் இங்கிலாந்து அணியும் கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்கள் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை கையாண்டு தான் வந்தது.
அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டம் என்ற பெயரில் பேஸ் பால் ஆட்டம் ஆடிவரும் இங்கிலாந்து அணி, அதிரடியாக ஆடி வேகமாகவும் ரன்கள் குவித்து வந்தது. ஆனால் இந்திய அணிக்காக இந்த தொடரில் ஓரளவுக்கு தான் அது எடுபட்டது என்பதால் அவர்கள் தோல்வியை தழுவும் நிலையும் உருவானது.
முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதன் பின்னர் இரு அணிகளுக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி முக்கியமாக இருந்த சூழலில் தான் இந்த போட்டி தற்போது நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்திருந்தது.
நல்ல ரன்களுடன் முன்னிலை வகித்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பெரிதாக யாருமே ரன் சேர்க்கவில்லை. இதனால் அவர்கள் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணியின் இலக்கும் குறைவானது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் இந்திய அணி பேட்டிங் இறங்கியது.
அது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. முதல் விக்கெட்டிற்கு ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து 84 ரன்கள் சேர்த்த நிலையில், அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.
120 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததால் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு அந்த சமயத்தில் இருந்தது. ஆனால்
முதல் இன்னிங்சில் 90 ரன்கள் சேர்த்து இந்திய அணியை மீட்டு கொடுத்த துருவ் ஜூரேலும், அவருடன் கைகோர்த்த கில்லும் அபாரமாக ஆடி மேலும் விக்கெட் விழாமல் இலக்கையும் எட்டினர். கில் 52 ரன்களும், துருவ் ஜூரேல் 39 ரன்களும் எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3 – 1 என்ற கணக்கில் தற்போது கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் போட்டியில் பேஸ் பால் ஆட்டம் கை கொடுக்கும் என சமீப காலமாக நம்பி வந்த இங்கிலாந்து அணிக்கு இந்த தொடரை வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.