ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தால் அனைவரும் சுதந்திர தினம் கொண்டாடுவது போல கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நினைவுக்கு வரும் ஒரு முக்கியமான விஷயம் தான் தோனியின் ரிட்டயர்மென்ட். 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையின் அரையிறுதியில் தோனி ரன் அவுட்டான சோகம் இன்னும் ரசிகர்களை வாட்டி வதைத்து தான் இருக்கிறது.
அதன் பின்னர் சுமார் பல மாதங்கள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தோனி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருந்தார். எதிர்பாராத நேரத்தில் அவரது இந்த முடிவு ரசிகர்களை கலங்க வைத்திருந்ததுடன் மட்டுமில்லாமல் அவரது கிரிக்கெட் பயணத்திற்கு பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
தோனி கேப்டனாக பல தொடர்களை வென்று கொடுத்த சமயத்தில் சேவாக் உள்ளிட்ட பல சீனியர் வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியதாக அவர் மீது விமர்சனம் அதிகமாக இருந்தது. ஆனால் அதே வேளையில் ரோஹித் சர்மா, விராட் கோலி என அந்த சமயத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களாக இருந்த பலரும் கிரிக்கெட் போட்டிகளில் தடுமாறிய சமயத்தில் அனைவருமே அவர்களை எதிர்த்தனர்.
ஆனால் ஒரு கேப்டனாக அனைவருக்குமே தொடர்ந்து வாய்ப்புகளை அளித்ததுடன் மட்டுமில்லாமல் சொதப்பினாலும் எந்த வீரர்களையும் அணியிலிருந்து மாற்றாமல் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்து நம்பர் ஒன் வீரராக மாற்றியதில் தோனியின் பங்கு மிகப் பெரியது.
இன்று இந்திய அணி தரப்பில் கிரிக்கெட் அரங்கில் முக்கியமாக இருக்கும் பல வீரர்களும் தோனியின் தொடர் வாய்ப்புகளால் ஜொலித்தவர்கள் தான். தற்போது இந்தியர்களால் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் தோனி குறித்து ரோஹித் ஷர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
“நான் எனது முதல் உலகக் கோப்பையை தோனியின் தலைமையின் கீழ் தான் ஆடியிருந்தேன். 2007 ஆம் ஆண்டில் இருந்து நானும் அவரும் ஒன்றாக நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளோம். அவர் எப்போதுமே என்னைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் திறனை அறிந்து தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வந்தார். அது மட்டுமில்லாமல் அந்த வீரர்கள் பாதுகாப்பு இல்லாமல் உணரக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.
ஒரு வீரர் அணியில் இணைந்து கிரிக்கெட் ஆடும் போது அதுதான் முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். நிறைய போட்டிகளில் ஆடும் வீரர்கள் கூட சில நேரம் மோசமான ஃபார்மில் இருக்கும் போது அவர்களின் தோளைத் தட்டிக் கொடுத்து ‘எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் அனைத்து திறனும் உள்ளது. இதற்கு மேல் உங்கள் ஆட்டத்தை ரசித்து ஆடுங்கள் எனக்கூறி செல்வார்.
இதுபோன்ற ஆதரவைத்தான் ஒரு கேப்டனிடம் இருந்து எப்போதும் தேவைப்படும். அதையெல்லாம் தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நாங்கள் பெற்றுக் கொண்டோம்” என உருக்கமாக கூறியிருந்தார். இப்படி தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோலி, ரோஹித் ஷர்மா என இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்கள் அவரைப் போலவே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.