ஆசிய கிரிக்கெட் கோப்பையின் முதல் போட்டி இலங்கையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த வருட ஆசியக் கோப்பை போட்டி மிகவும் அனல் பறக்கும் விதமாக இருந்த நிலையில் இந்த வருடம் நடக்கும் ஆசியக் கோப்பையும் மிகுந்த ஆக்ரோஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா சுப்மன் கில் ஆகியோர் களமிறங்க உள்ளனர். அதன்பிறகு விராத் கோலி, கே.எல். ராகுல் (அ) வேறு ஒரு பேட்ஸ்மேன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். அதற்கடுத்ததாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் மேலும் வலு சேர்க்கும் விதமாக இருக்கின்றனர்.
இந்திய அணியின் பவுலிங்கை எடுத்துக் கொண்டால் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும், ஜாஸ்பிரித் பும்ரா,ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலமாக உள்ளனர். இந்திய அணி இந்த முறை மிகுந்த பலமாக உள்ளதால் இந்த ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.
இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ள 17 பேர் கொண்ட வீரர்களை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது இதில் யாரும் எதிர்பாராத வகையில் இடது கை வீரரான திலக் வருமா அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
இவர் மட்டுமில்லாமல் ஒரு நாள் தொடர்களில் பெரிதும் சோபிக்காத சூரியகுமார் யாதவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை. சஞ்சு சம்சன் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பெறாமல் பேக்கப் வீரராக சேர்க்கப்பட்டதும் இந்திய அணி ரசிகர்களுக்கு மிகுந்த கொந்தளிப்பை உண்டாக்கியது.
மேலும் திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் என்பதால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: ஒரு தனிப்பட்ட வீரரை பிடிக்கும் பிடிக்காது என்பதால் அவரை தேர்வு செய்யவதும் அணியில் இருந்து நீக்குவதும் என்பது இங்கு நடைபெறுவதில்லை.
ஒவ்வொரு தேர்விற்கும் ஒவ்வொரு நீக்கத்திற்கும் தகுந்த காரணங்கள் உள்ளது. ஒருவரை அணியில் சேர்க்கப்படவில்லை என்றால் அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. சில சமயங்களில் வீரர்கள் நன்றாக ஆடினாலும் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. நாங்கள் அணியை சிறந்த கலவையாக தேர்ந்தெடுக்க முற்படும்போது சில வீரர்கள் அணியில் இடம்பெற தவறுகின்றனர்.
அந்த நிலையில் நானும் ராகுல் டிராவிடும் அந்த வீரர்களிடம் அவர்கள் ஏன் அணியில் இடம் பெறவில்லை என்பதை வெளிப்படையாக கூற முயற்சித்துள்ளோம். மேலும் அணியில் விளையாடும் 11 வீரர்கள் போக மற்ற வீரர்கள் அந்த ஆட்டத்தில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதையும் நாங்கள் அவர்களிடம் விளக்க கடமைப்பட்டிருக்கிறோம். சில வீரர்கள் தேர்வாகமால் போனால் அதற்காக நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.