ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
நியூசிலாந்து அணி தரப்பில் மிட்சல் 130 ரன்களும் எடுத்து அசத்தினார். அதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரரான ரச்சின் ரவீந்திரா 75 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றில் ஒரு காலை இந்திய அணி வைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் நெதர்லாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளுடன் போட்டிகள் இருப்பதால், நிச்சயம் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துவிடும்.
இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசும் போது, பாதி கிணற்றை கடந்துவிட்டோம். இந்திய அணியை பொறுத்தவரை சமநிலையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இறுதிப்போட்டியை பற்றி நினைக்க தேவையில்லை. நட்சத்திர பவுலர் முகமது ஷமிக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இந்த மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் முகமது ஷமிக்கு உள்ளது.
ஒரு கட்டத்தில் 300 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் கடைசி கட்டத்தில் எங்கள் பவுலர்கள் பிடியை இறுக்கிவிட்டனர். நானும் சுப்மன் கில்லும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்கள். சிறந்த ஆட்டத்தை தொடக்கத்தில் வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தான். விராட் கோலியை பொறுத்தவரை பல ஆண்டுகளாக இப்படியான இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார்.
விராட் கோலியும் ஜடேஜாவும் இணைந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். ஃபீல்டிங்கில் வழக்கமாக சிறப்பாக செயல்படுவோம். ஆனால் இன்றைய நாளில் நிறைய சொதப்பல்களை செய்துள்ளோம். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபீல்டர்களில் ஜடேஜாவும் ஒருவர். அதுபோல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்று கூறியுள்ளார்.