இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை தோல்வியை பெற்றது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதோட 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் கைப்பற்றாத சோகமும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக அஜின்க்யா ரஹானே 89 ரன்களை குவித்து அசத்தினார். அவர் ஷர்துல் தாகூருடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணி பாலோ ஆன்னிலிருந்து தப்பிக்க காரணமாக அமைந்தது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் விராட் கோலிக்கு(49) அடுத்து 46 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இப்படி ரகானே மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இரண்டாவது ரவுண்டு வருவதற்காக காத்திருக்கிறார். அதோடு ரோகித் சர்மாவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் வாய்ப்பு பெற இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய பின்னர் ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா, விரிதிமான் சாஹா ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டனர். அதில் புஜாரா இங்கிலாந்து கவுண்டி போட்டிகளுக்கு சென்று தனது திறனை நிரூபித்ததால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார்.
அதே வேளையில் ரகானே இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று அசத்தலான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அற்புதமாக இரு கை சேர்த்து இழுத்து பிடித்துள்ளார்.
மேலும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி ரன்களை குவிக்கும் வீரர்களில் சிறந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு மண்ணில் ரஹானே நிரூபித்துள்ளார். இருப்பினும் கடந்த ஆண்டு ரோகித் சர்மா ரஹானேவை இந்திய அணியிலிருந்து விடுவித்திருக்கக் கூடாது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு பெரிய பிளேயரை நாம் நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதேபோன்று தேர்வுக்குழுவினரிடமும் முறையிட்டு ரகானேவை ரோகித் சர்மா அணியில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய அனுபவத்தையும் பொருட்படுத்தாது ரகானேவை ரோகித் சர்மா வெளியேற்றியது தவறு என்று தற்போது உணர்ந்திருப்பார்.