- Advertisement 3-
Homeவிளையாட்டுஇளம் வீரர்கள் பேட்டிங்ல பிரச்சனை இருக்கு, ஆனா... அபார வெற்றிக்கு பின் ரோஹித் சொன்ன விஷயம்..

இளம் வீரர்கள் பேட்டிங்ல பிரச்சனை இருக்கு, ஆனா… அபார வெற்றிக்கு பின் ரோஹித் சொன்ன விஷயம்..

- Advertisement 1-

முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த சூழலில், ரோஹித் ஷர்மா தலைமையில் இளம் வீரர்களை அதிகம் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றியை ருசித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே போட்டியும் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களும் எடுத்திருந்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, 292 ரன்கள் எடுக்க இங்கிலாந்திற்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தாலும் இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.

இதனால், அவர்கள் இலக்கை எட்டிப் பிடிப்பதிலும் சிக்கல் உருவானது. முதல் இன்னிங்சில் விக்கெட்டுகள் எதையுமே எடுக்காத சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த முறை முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தார். பின்னர் பும்ராவும் அவருடன் கைகோர்க்க, 292 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்திய அணியும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தொடரையும் 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெல்வதிலும் நிச்சயம் இங்கிலாந்து அணி கடும் சவாலாக இருக்கும் என்பதால் இந்த தொடரும் விறுவிறுப்பாகவே செல்லும்.

- Advertisement 2-

இதனிடையே, இந்த வெற்றிக்கு பின்னர் பேசி இருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “பும்ரா எங்களின் சாம்பியன் பிளேயர். இது போன்ற போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறும் போது, அதில் ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸையும் நீங்கள் பார்க்க வேண்டும். நாங்கள் சிறப்பாக பேட்டிங்கையும் செய்தோம். இது போன்ற சூழ்நிலைகளில் டெஸ்ட் போட்டிகளை வெல்வது அவ்வளவு எளிது கிடையாது. எங்களின் பந்து வீச்சாளர்கள் முன்பு வந்து இதை செய்ய வேண்டுமென நினைத்தோம்.

ஜெய்ஸ்வால் அற்புதமான வீரராக உள்ளார். அவருடைய ஆட்டத்தை புரிந்து கொண்டும் ஆடுகிறார். இன்னும் அவர் செல்வதற்கு நிறைய தூரம் உள்ளது. அணியில் உள்ள குறைகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நன்றாக ஆரம்பித்த பேட்ஸ்மேன்கள், பின்னர் பெரிய ரன்னாக அதனை மாற்ற தவறி விட்டனர். ஆனால், இளம் வயதான அவர்கள் இந்த போட்டிக்கு புதிது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

அப்படிப்பட்ட இளம் பேட்ஸ்மேன்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தான் முக்கியம். இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக இளம் வீரர்கள் கொண்ட அணியை நினைத்து பெருமையாக உள்ளது. இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் தங்களின் திறனை நிரூபிக்க நேரம் ஆகலாம். அவர்கள் நெருக்கடி இல்லாமல் ஆட வேண்டுமென விரும்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறது. இந்த தொடர் எளிதாக இருக்காது என்பதும் தெரியும். மீதமுள்ள 3 போட்டிகளில், அணியில் உள்ள பல விஷயங்களை சரியாக செய்வோம்” என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சற்று முன்