இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 352 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர்.
இதில், ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, கோலி 56, ஷ்ரேயஸ் ஐயர் 48 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரண்களில் ஆட்டம் இழந்தனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி, 49.4 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தோல்விக்குப் பின் பேசிய ரோகித் ஷர்மா, “நாங்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடந்து முடிந்த இந்த போட்டியில் நான் இன்னும் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும். இருந்தபோதிலும், நான் விளையாடிய வரை நன்றாக விளையாடி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
நடந்து முடிந்த ஏழு, எட்டு ஒருநாள் போட்டிகளில் நாங்கள் மிகவும் சிறப்பாக தான் விளையாடி இருக்கிறோம். மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் மிகவும் பலமான அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாடி இருக்கிறோம். அதே சமயம் சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டோம் என்று நம்புகிறேன்.
இருந்தபோதிலும் நாங்கள் எதிர்பார்த்த முடிவு இன்று அமையவில்லை. பும்ராவின் விளையாட்டு மகிழ்ச்சிகரமாக உள்ளது. அவர் உடல் நிலை நன்கு ஆரோக்கியமாக இருப்பதிலும் மகிழ்ச்சி. அவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருக்கிறது. ஒரு மோசமான விளையாட்டு என்பது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அவர் மனதளவிலும் உடலுறவிலும் எப்படி சிந்திக்கிறார் என்பதுதான் எங்களுக்கு தேவை. அது மகிழ்ச்சிகரமாகவும் உள்ளது.
அதேபோல் உலகக் கோப்பை அணியில் எந்த 15 வீரர்கள் தேவை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதே சமயம் அவர்களிடம் என்ன தேவை என்பதிலும் எங்களுக்கு தெளிவு இருக்கிறது, அதில் எந்த குழப்பமும் இல்லை. இது ஒரு டீம் ஸ்போர்ட்ஸ் என்பதால் அணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் விளையாட வேண்டும். அப்பொழுதுதான் கோப்பைகளை வெல்ல முடியும். அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு வீரர்கள் உடலை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.