ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக ஆடிய அவர், 84 பந்துகளில் 131 ரன்களை விளாசினார்.
இதனை தொடர்ந்து ரோகித் சர்மா பேசுகையில், பேட்டிங் செய்வதற்கு உகந்த பிட்சாக இது இருந்தது. வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நம்பிக்கையுடன் விளையாடினேன். சில ஷாட்களை விளையாடிவிட்டால், நிச்சயம் பிட்ச் உதவியாக இருக்கும் என்று கருதினேன். உலகக்கோப்பை தொடரில் சதம் விளாசியது மிகச்சிறந்த உணர்வாக உள்ளது. 7 சதங்கள் விளாசி சாதனை படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் அதில் அதிக கவனம் கொடுக்க விரும்பவில்லை.
இன்றைய ஆட்டத்தில் நான் சில ஷாட்களை பந்து வருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு அடித்தேன். மனது சொல்வதை கேட்டு விளையாடினேன் என்று தான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் எனக்கு இதுபோல் விளையாடுவது உதவியாக இருக்கும். இதுபோன்ற சேஸ்களில் மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுப்பதுதான் என் பணி. கடந்த காலங்களில் அதனை செய்திருக்கிறேன். பவுலர்களை அட்டாக் செய்வது அனைத்து நேரங்களிலும் சரிபட்டு வராது. ஆனால் இதனை அடுத்து வரும் ஆட்டங்களில் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். தொடரின் தொடக்கத்திலேயே இப்படியான வெற்றியை பெற வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அடுத்தடுத்த போட்டிகளில் நம்பிக்கை அதிகரிக்கும். கேப்டன்சியை பொறுத்தவரை அழுத்தத்தை உணர்ந்து உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சில நேரங்களில் எதிரணியினர் சிறந்த பவுலிங் வீசும் போது, நாம் அழுத்தத்தை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இந்திய அணியில் வித்தியாசமான திறமை கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அணிக்கு வெவ்வேறு வகையில் உதவியாக இருக்கிறார்கள். அணிக்கு தேவையானதை வழங்குகிறார்கள். அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடும் வீரர்களும், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் போல் அழுத்தத்தை உணர்ந்து ஆடும் வீரர்களும் உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பொறுத்தவரை, வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை பற்றி கண்டுகொள்ளாமல், நாங்கள் விளையாட வேண்டும். அணி வீரர்களின் காம்பினேஷன், பிட்ச்சின் தன்மையை அறிவது, அதற்கேற்ப வீரர்களை கொண்டு வருவதெல்லாம் எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தேவையில்லாத அழுத்தத்தை எடுத்துக் கொள்ள மாட்டோம். எங்களின் ஆட்டத்தில் மட்டுமே கவனம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.