ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அதில் ஆறு முதல் ஏழு போட்டிகளை வென்றால் தான் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற ஒரு இக்கட்டான சூழலும் உருவாகியுள்ளது.
இதற்கு காரணம் அந்த அணியின் பந்துவீச்சு மிகப்பெரிய பலவீனமாக இருப்பது தான். ஐபிஎல் ஏலத்தின் போது ஆர்சிபி அணி சிறந்த பந்துவீச்சாளர்களை எடுக்க வேண்டும் என பலரும் குறிப்பிட்டு வந்த போதிலும் அதனை கண்டு கொள்ளாமல் மிக சுமாராக பந்து வீசுபவர்களை தான் ஏலத்திலும் எடுத்திருந்தது. இதன் விளைவாக இந்த தொடரில் 200 ரன்களை அடித்தாலும் கூட ஆர்சிபி அணி தோல்வியை தான் சந்தித்து வருகிறது. சமீபத்தில் மும்பை அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் கூட ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்தும் அதனை 16 வது ஓவரில் எட்டிப் பிடித்தது மும்பை.
அந்த அளவுக்கு ஆர்சிபியின் பந்துவீச்சு படுமோசமாக இருக்கும் நிலையில் இனி வரும் போட்டிகளில் நிச்சயம் ஏதாவது மாற்றங்களை செய்தாக வேண்டிய சூழலில் தான் அந்த அணி உள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தாலும் அந்த அணிக்கு சில விஷயங்கள் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்பட்டு வருகிறது.
தொடக்க வீரரான விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் கைப்பற்றி உள்ளதால் டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என கருதப்படுகிறது. அதேபோல தினேஷ் கார்த்திக் தன்னுடைய 39 வயதிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை கையில் எடுத்து ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார்.
இந்த போட்டியில் ஆகாஷ் மத்வால் வீசிய ஒரே ஓவரில் தேர்ட் மேன் திசையில் நான்கு பவுண்டரிகளை அடித்து மும்பை அணியை கதற விட்டிருந்தார். பொதுவாக உலகக்கோப்பை தொடர் வரும் ஆண்டில் மிகச் சிறப்பாக ஆடும் தினேஷ் கார்த்திக் இந்த முறையும் அதை செய்ய தவறவில்லை. தொடர்ந்து வர்ணனையில் ஈடுபட்டு வரும் அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்றும் பல ஊகங்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொன்ன வார்த்தை தற்போது பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா, போட்டிக்கு நடுவே தினேஷ் கார்த்திக் அருகே வந்து, ‘சபாஷ் தினேஷ் கார்த்திக். இந்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ளது’ என சிரித்துக் கொண்டே கூறிவிட்டு சென்றார்.
இந்திய அணியின் கேப்டனே இப்படி ஒரு கருத்தை ஜாலியாக குறிப்பிட்டுள்ளதால் தினேஷ் கார்த்திக் இந்த ஃபார்மை தொடர்ந்தால் டி20 உலக கோப்பை அணியில் அவர் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.