இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதற்குப் பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். பலரும் அவர் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து நீக்கப்படவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்த தொடரை வென்று இழந்த பெயரை மீட்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மாவும் இந்திய அணியும் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் 14 மற்றும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் ரோகித் சர்மா பற்றி பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பிர் மற்றும் பேட்டர் கம்ரான் அக்மல், தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அக்மல் தனது யூடியூப் சேனலில் “டெஸ்ட் போட்டிகளில் ரோகித் தனது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் மற்றும் கோலிக்கு நிகரான ஒரு கமாண்டிங் இருப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. ரோகித் சர்மா தனது ஆட்டத்தை உயர்த்தி நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, விராட் கோலியை நினைவூட்டும் வகையில் களத்தில் இருக்க வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்
மேலும், அக்மல் கோலியை ஆல்டைம் சிறந்த வீரர் என்று பாராட்டியுள்ளார். மேலும் “பல இளம் வீரர்கள் களத்தில் கோலியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.” என்றும் கூறியுள்ளார். மேலும் கோலியின் வெற்றிக்கான பசி, ஆடுகளத்தில் அவரது இருப்பு மற்றும் ஒட்டுமொத்த சிறப்பையும் பாராட்டிய அக்மல், அவர் கிரிக்கெட் வீரர்களிடையே விருப்பமான வீரர் என்றும், பாராட்டியுள்ளார்.
இந்திய அணிக்கு மூன்று வடிவிலும் கேப்டனாக இருந்த கோலி கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் பிசிசிஐ அவரை நீக்கியது. ஒருவருடம் கழித்து 2022 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்தும் கேப்டன் பொறுப்பை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.