இந்த தொடரின் ஆரம்பத்தில் மோசமான தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 5 போட்டிகளில் நான்கை வென்று இப்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியது முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்றைய போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அவர் சந்தித்த 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி மைதானத்தை ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வோடு வைத்திருந்தார். நேற்றைய போட்டியில் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். வழக்கமாக நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் சூர்யா, நேற்று மூன்றாம் இடத்தில் இறங்கியது பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.
போட்டி முடிந்ததும் பேசிய அவர் “இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருந்தது, குறிப்பாக எங்கள் பார்வையில் இரண்டு புள்ளிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. எங்கள் பௌலர்கள் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை சாய்த்தனர். ஆனால் பணிப் பொழிவு அதிகமாக இருந்ததால் போக போக பந்து வீசுவது சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் நாங்கள் அதை சமாளித்தோம்.
நாங்கள் தொடரின் ஆரம்பத்தில் வலது-இடது கை பேட்ஸ்மேன்களின் காம்பினேஷனையே வைத்திருக்க விரும்பினோம். ஆனால் நேற்று சூர்யா பிடிவாதமாக உள்ளே வந்து விளையாட விரும்பினார். அதுவே அவருக்கு இருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அணியின் மற்ற வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அவர் புதிதாக தொடங்க விரும்புகிறார். பழைய போட்டிகளை திரும்பிப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் நீங்கள் உட்கார்ந்து பழைய போட்டிகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள நினைப்பீர்கள். ஆனால் அவர் அப்படி இல்லை” எனப் பாராட்டித் தள்ளியுள்ளார்.