நேற்று நடந்த 63 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்ல, இந்த போட்டியை வெல்வது முக்கியம் என்ற சூழலில் பரபரப்பாக நடந்து முடிந்தது இந்த போட்டி. பரபரப்பான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டாய்னஸ் 47 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து கரைசேர்த்தார். அவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் அதிக சுழல்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
178 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஜோடியான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனாலும் அந்த ஜோடி பிரிந்த பின்னர் சிறப்பாக பந்துவீசி, போட்டியை தன்பக்கம் இழுத்தது லக்னோ அணி. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய மோசின் கான் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி வாகை சூட வைத்தார்.
இந்த தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா “ஆட்டத்தில் வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெற தேவையான சிறிய தருணங்களைத் தவறவிட்டோம். நாங்கள் ஆடுகளத்தை நன்றாக மதிப்பீடு செய்தோம், இந்த பிட்ச் பேட்டிங் செய்ய ஒரு நல்ல பிட்ச். அவர்கள் கொடுத்த இலக்கு நிச்சயமாக எட்டக்கூடியதுதான். இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் நாங்கள் வழி தவறிவிட்டோம். முதல் இன்னிங்ஸில் கடைசியில் நாங்கள் அதிக ரன்களை கொடுத்தோம், கடைசி மூன்று ஓவர்களில் அதிக ரன்கள் அவர்களுக்கு கிடைத்தன.
இதையும் படிக்கலாமே: லக்னோவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்!
ஆனால் நாங்கள் பேட்டிங்கை தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஸ்டோய்னிஸ் நன்றாக விளையாடினார், இது போன்ற ஒரு ஆடுகளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது அவரை போல விளையாட வேண்டியதுதான். அவரிடமிருந்து ஒரு அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது. நெட் ரன்ரேட் எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை, ஆனால் நாங்கள் இந்த தோல்வியில் இருந்து வெளியே வந்து எங்களின் கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.