ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு, அந்த அணியை சேர்ந்த அனைவரது புகழும் உச்சத்தை தொட்டுள்ளது என்றே கூறலாம். ஓஹோவென புகழ்பெற்ற பத்திரனா தொடங்கி, விமர்சனம், புகழ் என அனைத்தையும் பார்த்த ஜடேஜா வரை எல்லாருக்கும் இது நிச்சயம் ஒரு தனித்துவமான ஐபிஎல்-லாக இருந்திருக்கும்.
அதே போல, சென்னை அணிக்காக கடந்த சில சீசன்களாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் சிறப்பான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறார். இதுவரை தான் விளையாடிய சீசன்களில் சிறப்பாக விளையாடி ஸ்கோர்களை சேர்த்து வரும் அவருக்கு இன்னும் இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தப் போகும் தகுதி வாய்ந்த நபர்களில் ருத்துராஜும் ஒருவராக உள்ளார். அணியில் பல பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தாலும் ருத்துராஜ் கெய்க்வாட் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் வயது குறைவாக உள்ள அவர் நீண்ட காலம் தோனி போல அணியை வழிநடத்தி செல்லும் வாய்ப்புள்ளது. அணியில் உள்ள ஜடெஜா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை விட வயது குறைந்த வீரராக ருத்துராஜ் உள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் முழுவதும், கெய்க்வாட் 590 ரன்கள் குவித்து தனது தகுதியை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி, 26 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். இந்த ஆண்டிலாவது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்குமா என சென்னை அணி ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் வாசிம் அக்ரம் இந்திய அணியில் ருத்துராஜுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என பாராட்டியுள்ளார். ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் இரண்டிலும் கெய்க்வாட்டின் சீரான செயல்பாடுகள் அவரை எதிர்காலத்தில் இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க வீரராக மாற்றும் என்று அக்ரம் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: தோனிக்கு முழுசா எப்போ கால் சரியாகும்னு சொல்ல முடியாது. ஆனா கொறஞ்சது இத்தனை மாசம் ஆகும் என கூறிய மருத்துவர்கள். அவர் எப்போ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? எந்த மருத்துவமனை – முழு விவரம்
மேலும் ருத்துராஜ் பற்றி பேசியுள்ள அவர் “அவர் அழுத்தத்தின் கீழ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இருக்கக் கூடிய கூடுதல் பலம் என்னவென்றால், அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த பீல்டர் மற்றும் இளமையாகவும் இருக்கிறார். கெய்க்வாட் இந்திய கிரிக்கெட்டுக்கு வரும்போது பிரகாசமான எதிர்காலம் உள்ளது.” என்று அக்ரம் கூறியுள்ளார்.