இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவுகள் 214 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாட துவங்கிய சென்னை அணியானது 215 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தியபோது முதல் மூன்று பந்துகளை சந்தித்த வேளையில் 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.
இதன்காரணமாக போட்டி 15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மாற்றி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய சென்னை அணியானது 15 ஓவர்களில் 171 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நிலையில் விளையாடிய போது கடைசி இரண்டு பந்துகளில் சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா கடைசி ஓவரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் சிக்சர் மற்றும் பவுண்டரி என விளாச சென்னை அணி மகத்தான வெற்றி பெற்றதோடு ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்தது. அதோடு கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு சாம்பியனாகவும் மாறியுள்ளது.
இப்படி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றதும் சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் பல்வேறு வகையில் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோனியை சந்திக்க சென்னை அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து மைதானத்திற்குள் புகைப்படம் எடுத்துக் கொள்வது, பேசுவது, மகிழ்ச்சியை கொண்டாடுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர்.
அப்படி பலரும் பல்வேறு விதத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் வருங்கால மனைவி உட்கர் ஷா பவார் தோனியை கட்டி தழுவி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார். அதோடு அவர் தோனியை கண்டதும் காலில் விழுந்து வணங்கியது தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
சென்னை அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரராக பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் வரும் ஜூன் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் உட்கர் ஷா பவர் என்பவரை திருமணம் செய்ய உள்ள வேளையில் தற்போது அவர்கள் இருவரும் தோனியுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் திருமணத்தின் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.