கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜாவை அறிவிக்கும்படியும் அணி நிர்வாகத்தை அறிவுறுத்தி இருந்தார். திடீரென தோனி இப்படி ஒரு முடிவை எடுத்தது ரசிகர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. மேலும் அந்தத் தொடரில் ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணியும் சிறந்தவொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தனர்.
முதல் பாதி லீக் சுற்றில் ஜடேஜா கேப்டன்சியில் அழுத்தம் காரணமாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அவரால் ஜொலிக்க முடியாமல் போனதாக தெரிகிறது. அவரது பலவீனம் காரணமாக சிஎஸ்கே அணியும் தடுமாற்றம் காண பின்னர் மீண்டும் தோனியே கேப்டனாக இருந்து கடந்த சீசனிலும் அவர்களை வழி நடத்தி கோப்பையை வெல்ல உதவி இருந்தார்.
மேலும் 42 வயதாகும் தோனி தற்போது ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் தான் இந்த முறையும் யாரும் எதிர்பாராத ஒரு முடிவை அவர் எடுத்துள்ளார். அதாவது இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாடை புதிய கேப்டனாக நியமிக்க, சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு இதுவும் சற்று ஏமாற்றமாக தான் இருந்தது.
ஆனாலும் வருங்காலத்தில் அணியில் இருந்து தோனி விலகுவார் என்பதால் இளம் வீரரை கொண்டு நேர்த்தியாக அவர் எடுத்த முடிவுக்கு பாராட்டுக்களும் கிடைத்து தான் வருகிறது. ருத்துராஜ் கேப்டனாக இருந்தாலும் களத்தில் போட்டிக்கு நடுவே தோனியின் பங்கும் பெரிதாக இருக்கும் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் தோனி தலைமையில் 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு எதிராக நடக்காத ஒரு விஷயம் ருத்துராஜ் தலைமையில் சிஎஸ்கே களமிறங்கிய முதல் போட்டியிலேயே நடந்துள்ளது.
அதாவது கடந்த 16 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட் அல்லது அதற்கு பின்னர் உள்ள விக்கெட்டுகளில் அதிக பார்ட்னர்ஷிப் சேர்த்த இணையாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 81 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டிற்கு கீழ் ஒரு இணை சேர்த்த அதிகபட்சமாக இந்த 81 ரன் தான் இருந்தது. ஆனால் ருத்துராஜ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவுக்கு எதிராக ஒரு அணியின் ஆறாவது விக்கெட் அல்லது அதற்கு கீழே உள்ள இருவர் சேர்ந்து 90 ரன்களுக்கு மேல் முதல் முறையாக கடந்து அசத்தியுள்ளனர்.
தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே 95 ரன்களை ஆறாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக சேர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.