ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக முடித்திருந்த இந்திய அணி, வரிசையாக நிறைய இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களை ஆட உள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் மோத உள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதில் பல வியப்பான விஷயங்கள் அரங்கேறி உள்ளது தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக் காலம் கடந்த டி20 உலக கோப்பைத் தொடருடன் முடிவடைந்திருந்ததை அடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். 2027 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடர் வரை இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தெரியும் நிலையில், இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதும் தொடர் தான் அவரது முதல் தொடராகவும் இருக்கப் போகிறது.
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த ஆலோசகராக ஜொலித்த கம்பீர், இந்திய அணியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனுபவம் உள்ளிட்ட விஷயங்களை பார்க்காமல் திறமை இருக்கும் இளம் வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகளை அவர் வழங்குவார் என்றும் தெரிகிறது.
இதனிடையே, தற்போது இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி தொடர்பாக சில விமர்சனங்களும் உருவாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே எல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ரோஹித் மற்றும் கோலியின் வரவு பலம் சேர்த்திருந்தாலும் கில் துணை கேப்டன் ஆனது பெரிய விமர்சனத்தை உருவாக்கி உள்ளது. மேலும் சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பெறாமல் போக, கில்லுக்கு இந்த பதவி கிடைத்தாலும் கே எல் ராகுல், ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்கு துணை கேப்டன் பதவி ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.
இன்னொரு பக்கம், டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இருந்தும் சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலும் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில், ஜிம்பாப்வே தொடரில் ஜொலித்த ருத்துராஜிற்கு இரண்டு தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே வேளையில், உலக கோப்பைத் தொடரில் ஜொலிக்காத ஷிவம் துபே இரண்டிலும் இடம் பிடித்துள்ளார்.
அதே போல, ஜிம்பாப்வே தொடரில் தடுமாறிய ரியான் பராக்கிற்கு ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டிலும் இடம் கிடைத்தும் ருத்துராஜை சேர்க்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கம்பீர் பயிற்சியாளராக கால் தடம் பதிக்கும் முதல் தொடரிலேயே பல விமர்சனங்கள் உருவாக, இதை எல்லாம் எப்படி சமாளித்து வெற்றியை எட்ட போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.