ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என மூன்று அணிகள் 12 போட்டிகளில் ஆடி 12 போட்டிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்தது. ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் இருந்தாலும் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் அவர்கள் ராஜஸ்தான் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டிருந்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெரிய அளவில் ரன் சேர்க்கவும் சிரமப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்திருந்த ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும் ரவீந்திரா மற்றும் மிட்செல் ஆகியோர் சிறிய இடைவெளியில் அவுட் ஆனதால் பின்னர் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினர்.
இதற்கு மத்தியில் மொயீன் அலியும், சிறிய கேமியோ கொடுத்த துபேவும் அவுட்டாக, கடைசி 5 ஓவர்களில் 26 ரன்கள் வேண்டுமென்ற நிலை சிஎஸ்கேவுக்கு உருவானது. இதற்கு மத்தியில் ஜடேஜாவும் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக, ருத்துராஜ் மற்றும் சமீர் ரிஸ்வி இணைந்து எளிதான வெற்றியை சிஎஸ்கேவுக்கு 19 வது ஓவரில் பெற்று கொடுத்திருந்தனர். தொடக்க வீரராக களமிறங்கி நிதானமாக ருத்துராஜ் ஆடி இருந்தாலும் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவரது இன்னிங்ஸ் அமைந்திருந்தது.
இந்த வெற்றிக்கு பின் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்த மகிழ்ச்சியில் பேசி இருந்த ருத்துராஜ், “இந்த போட்டியை வென்றது மிக அற்புதமான உணர்வாக உள்ளது. அதுவும் எங்களின் ஹோம் கிரவுண்டில் கடைசி லீக் போட்டியில் வென்றது சிறப்பு. 55 ரன்களில் ஒரு விக்கெட்டை நாங்கள் இழந்திருந்த போது நன்றாக இருந்தது. ஆனால் அடுத்த ஒரு சில விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததும் எதிரணியினரும் கம்பேக் கொடுத்தனர்.
எங்கள் அணியில் நிதானமாக ரன் சேர்க்கும் வீரர்கள் இருந்ததால் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேலையாக இருந்தது. இதனால் கடைசி வரை எங்களுக்கு நெருக்கடி உருவாகவில்லை. மேலும் இது போன்ற பிட்ச்சில் விளையாடுவதும் பிடித்தமானதாக இருக்கிறது. உங்கள் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவும் ஒரு வழியாக அமைந்திருந்தது.
மேலும் முதலில் பந்து வீசும் போது இங்கே சில திட்டங்களுடன் தான் வர வேண்டும். விக்கெட் பிளாட் பிட்ச்சாக இருக்கும்போது யார்க்கர் பந்துகளை வீச முயற்சி செய்ய வேண்டும் அதே வேளையில் மிகவும் ஸ்லோவாக இருந்தால் பந்தின் வேகத்தை குறைத்து சுழற்பந்து வீச்சிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என ருத்துராஜ் கூறினார்.