ஐபிஎல் 16 ஆவது சீசனின் 57 ஆவது போட்டி நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததது. முதலில் பேட் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது.
10 ரன்ரேட்டில் சென்று கொண்டிருந்த தொடக்க ஜோடியை, ஏழாவது ஓவரில் ரஷீத் கான் பிரித்தார். அதன் பின்னர் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, பாரம் முழுவதும் சூர்யகுமார் யாதவ் மேல் விழுந்தது. ஆனால் விக்கெட்களை பற்றி கவலைப்படாமல், சூர்யகுமார் வழக்கமாக தன்னுடைய அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார்.
மறுபக்கம் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக வான வேடிக்கைக் காட்டிய சூர்யகுமார் யாதவ் சதத்தை நெருங்கினார். கடைசி ஓவரில் அவரின் சதத்துக்கு 15 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. இதனால் அவரால் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். கடந்த சில மாதங்களாக உச்ச ஃபார்மில் இருந்த சமீபத்தில் சில போட்டிகளில் சறுக்கினார். இந்நிலையில் நேற்றைய சதத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய கிளாஸ் ப்ளஸ் மாஸைக் காட்டியுள்ளார். அவர் சந்தித்த 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி மைதானத்தை ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வோடு வைத்திருந்தார்.
இதையும் படிக்கலாமே: 20 வயதே ஆன இலங்கை வீரர் மதீஷா பதிரானாவை தோனி கொண்டாட என்ன காரணம்? – விவரம் இதோ
நேற்று அவரின் ஷாட் செலக்ஷன்களைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கரே தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படையாகக் காட்டினார். மேலும் இன்னிங்ஸ் முடிந்ததுமே சூர்யகுமாரின் இன்னிங்ஸைப் பாராட்டி ட்வீட் செய்தார். சதமடித்து வெற்றிக்குக் காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.