ஐபிஎல் தொடரில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளான நிலையில் அவரின் மிக முக்கியமான சாதனை ஒன்றை முறியடித்து தற்போது தன் வசமாக்கியுள்ளார் தமிழக வீரர் சாய் சுதர்சன். குஜராத் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கடந்த சில சீசன்களில் ஆடி வரும் சாய் சுதர்சன், இந்த முறையும் நல்ல ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் ஆடி 527 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், இந்த முறை 500 ரன்களைக் கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சில கிரிக்கெட் வீரர்கள் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்று வருவதுடன் மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வருகின்றனர். அந்த வரிசையில் வருண் சக்கரவர்த்தி, நடராஜன், ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட பலரை போல சாய் சுதர்சனும் மிக முக்கியமான ஒரு இடத்தையும் தமிழக வீரராக பிடித்துள்ளார்.
குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சமீபத்தில் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கில் மற்றும் சுதர்சன் என இருவருமே சதம் அடித்திருந்ததால் சிஎஸ்கே அணியின் போட்டி கையை விட்டு முதல் இன்னிங்சிலேயே சென்று விட்டது என்பதும் உறுதியானது.
மேலும் இந்த போட்டியில் சாய் சுதர்சன தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இன்னொரு பக்கம் சுப்மன் கில் அடித்த சதம், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் நூறாவது சதமாகவும் அமைந்திருந்தது.
இப்படி பல முக்கியமான சாதனைகள் மற்றும் மைல்கல்கள், இந்த சீசனில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பார்ட்னர்ஷிப் மற்றொரு முக்கியமான ரெக்கார்டையும் எட்டி இருந்தது. இந்த நிலையில் தான் தமிழக வீரர் சாய் சுதர்சன் மிக முக்கியமான சாதனையை ஐபிஎல் வரலாற்றில் படைத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கடைசியாக ஆடி இருந்த சச்சின் டெண்டுல்கர் தான், ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாக தொட்ட வீரர் (31 இன்னிங்ஸ்) என்ற சிறப்பை பெற்றிருந்தார். அந்த 11 ஆண்டுகால சாதனையை தற்போது முறியடித்த சாய் சுதர்சன், 25 இன்னிங்ஸ்களிலேயே 1000 ரன்களைத் தொட்டு பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளார்.
சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன், வரும் நாட்களில் இன்னும் பல ஜாம்பவான்களின் சாதனையை அடித்து நொறுக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.