பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி தோற்கும் போது அந்த அணியின் ரசிகர்கள் அதனை பெரிதும் கொண்டாடுவதை பார்ப்பதே மிக அரிதான ஒரு நிகழ்வு. ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போதிலும் அந்த அணியின் ரசிகர்கள் மிகப் பெரிதாக இந்த போட்டியை கொண்டாடி உள்ளனர்.
இதற்கு மிக மிக முக்கிய காரணம் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பதிவியிலிருந்து விலகி இருந்த நிலையில் ருத்துராஜ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் தோனியை கேப்டனாக போட்டிக்கு முன்னும், பின்னும் பார்க்க முடியாது என்ற நிலையில் அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர்.
முதல் இரண்டு போட்டியில் ஒரு சில முக்கியமான கேட்சகளையும் ரன் அவுட்டையும் விக்கெட் கீப்பராக செய்த தோனிக்கு ஒருமுறை கூட பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி இருந்ததால் சேப்பாக்கத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோனியால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இலக்கை நோக்கி ஆடி இருந்த சென்னை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. ஆறு விக்கெட்டுகள் சென்றதால் எட்டாவது வீரராக உள்ளே தோனி வந்ததுமே மைதானத்தில் நின்ற அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டாடியிருந்தனர். விக்கெட் போனதை எண்ணி அவர்கள் கவலைப்படாமல் தோனியை கொண்டாடித் தீர்த்தனர். இந்த ரசிகர்களை ஏமாற்றாத வழியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 16 பந்துகளில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு 37 ரன்கள் அடித்திருந்தார் தோனி.
அவர் அடித்த பல ஷாட்களும் வின்டேஜ் தோனியை ஞாபகப்படுத்துவது போல அமைந்திருந்தது. மேலும் சிஎஸ்கே தோற்ற போதிலும் தோனியின் பேட்டிங்கை தான் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தோனியின் மனைவியான சாக்ஷி கணவரின் பேட்டிங்கை கலாய்த்து சொன்ன விஷயம், கவனம் ஈர்த்து வருகிறது.
தோனியின் அதிரடி ஆட்டம் காரணமாக, சிறந்த ஸ்ட்ரைக் ரேட் பிளேயர் என்ற எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருது தோனிக்கு கிடைத்திருந்தது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சாக்ஷி தோனி, “வெல்கம் பேக் ரிஷப் பந்த்” என டெல்லி கேப்டன் இன்னிங்ஸை பாராட்டி இருந்தார்.
தொடர்ந்து, கணவர் தோனி இந்த விருது வாங்கும் போது சிரித்த முகத்துடன் இருந்ததை குறிப்பிட்டு, “சிஎஸ்கே தோற்று போனதை உணராமல் இருக்கிறீர்களா?” என வேடிக்கையாக கேட்டுள்ளார்.