ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சில்தான் இந்த வெற்றிக்கிட்டியது. ஹாரிஸ் ரஃப் நான்கு விக்கெட்டுகளும், நசீம் ஷா மூன்று விக்கெட்டுகளும் ஷாஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் எடுத்தார்.
இந்த நிலையில், லீக் சுற்றை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. முன்னதாக நடந்த லீக் போட்டியில் மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்தியா திணறியது. குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு தண்ணி கட்டினார். ரோகித் 14, கோலி 4, கில் 10 ரன்களிலும் போல்டாகினர்.
பின் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி இந்தியா விக்கெட் இழப்பின்றி 147 ரன்களை சேஸ் செய்து அபார வெற்றிபெற்றது. ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அரைசதம் அடித்திருந்ததால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இவர்கள் நல்ல ஓபனிங் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மீண்டும் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் தடுமாறுவார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், நேபாளம் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா, கில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினால் இந்திய அணி வீரர்களுக்கு நம்பிக்கை தரும்.
நீங்கள் நேபாளம் அணிக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்பது முக்கியமில்லை. ஏனெனில் அந்த அணியில் ஷாஹீன் அப்ரிடி இல்லை. ஷாஹீன் அப்ரிடியிடம் எக்ஸ் ஃபேக்டர் உள்ளது. தற்போதைய உலக கிரிக்கெட்டில் அவரை போன்ற பந்துவீச்சாளர் யாரும் இல்லை. புதிய பந்தில் பந்துவீச அவர் தான் சிறந்த வீரர் என்றார்.
மேலும் ஷாஹீன் அப்ரிடியை விட வேகமாக பந்துவீசும் பந்துவீச்சாளர்களையெல்லாம் சுப்மன் சில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம், ஆனால் ஷாஹீன் அப்ரிடியிடம் அவரால் அதை செய்ய முடியாது என பட் தெரிவித்துள்ளார். இது குறித்து விவரதித்த அவர்,150 கிமீ வேகத்தில் பந்துவீசும் அன்ரிச் நார்க்கியா மற்றும் ககிசோ ரபாபா போன்றவர்களுக்கு எதிராக ஷுப்மன் கில் பேட்டிங் செய்திருப்பார். லொக்கி பெர்குசன் இருந்த நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார்.
இது வேகம் மட்டுமல்ல. வேகத்துடன், லைன், லெங்க்த், ஸ்விங் இதெல்லாம் முக்கியம். இவை ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் உள்ளது. ஷாஹீன் அப்ரிடி பந்தை தாமதமாக ஸ்விங் செய்து எப்பேற்பட்ட பேட்டர்களையும் திணறடிப்பார். சுப்மன் கில் புதியவர். அனுபவம் வாய்ந்த ரோகித் ஷர்மாவை ஷாஹீன் அப்ரிடி திணறடித்துள்ளார். கோலியையும் வீழ்த்தியுள்ளார் என தெரிவித்தார். இந்தியா – பாக் போட்டி செப்.10ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.