2024 ஆம் ஆண்டு தொடருக்கான ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆரம்பமான இந்த ஐபிஎல் ஏலம், அதன் வரலாற்றில் பல புதிய மைல்கல்களை உண்டு பண்ணி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னதாக, இந்த முறை ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், இதன் இறுதி பட்டியலில் 333 வீரர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தனர். இதிலும் கூட, சர்வதேச போட்டிகளில் கலக்கிய பல வீரர்கள் இருப்பது ஐபிஎல் ஏலத்தை பரபரப்பாக்கும் என்பதும் பேசு பொருளாக அமைந்திருந்தது.
ஒரு பக்கம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கவனம் பெறும் நிலையில், இன்னொரு பக்கம் இந்தியாவை சேர்ந்த பல இளம் வீரர்களுக்கும் கூட ஐபிஎல் தொடர் என்பது ஒரு சிறந்த தளமாக உள்ளது. அப்படி இந்த முறையும் ஐபிஎல் ஏலத்தில் பல இளம் வீரர்கள் பட்டையை கிளப்பி உள்ளனர்.
.
உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக தொகைக்கு பெறப்பட்ட வீரராக கம்மின்ஸ் வரலாறு படைத்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி, 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து கம்மின்ஸ் சாதனையை சில மணி நேரத்தில் முறியடிக்கவும் செய்தது.
மேலும், இரண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இப்படி ஒரு தனி சிறப்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல, சர்வதேச போட்டிகளில் ஆடாத இந்திய இளம் வீரர்களான ஷுபம் துபே, சிவம் மாவி, ஷாருக்கான், சமீர் ரிஸ்வி உள்ளிட்ட பல இளம் வீரர்களும் ஐந்து கோடிக்கும் அதிகமான தொகைகளுக்கு ஏலம் போய் தங்கள் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளனர். இதில் மிக முக்கியமாக தற்போது கவனிக்கப்பட்டு வருபவர் சமீர் ரிஸ்வி.
இவரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயதே ஆகும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி, முதல் தர போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார். வலது கை சுரேஷ் ரெய்னா என்ற பெயரும் சமீருக்கு உள்ள நிலையில், அவர் சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்றும் தெரிகிறது.
அதற்காகவே பல அணிகள் சமீர் ரிஸ்வியை தங்களது அணியில் இணைக்க போட்டி போட்டிருந்த நிலையில், கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை சொந்தமாக்கியது. இவர் UP டி 20 லீக்கின் முதல் தொடரில் அதிவேக சதமடித்திருந்தார். அதே போல, அதிகம் சிக்ஸர்களை அடிக்கும் ரிஸ்வி, நிச்சயம் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.